தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் - ஆட்சியர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி உணவகத்தினை ஆட்சியர் கோ.லட்சுமிபதி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2023-2024 ஆண்டுக்கு சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும், சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும் வண்ணமும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் ‘சிறுதானிய சிற்றுண்டி உணவகம்” ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய சிற்றுண்டி உணவகத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) மல்லிகா, மேலாளர் (மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம்) ரூபன் ஆஸ்டின், உதவி திட்ட அலுவலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிறுதானிய சிற்றுண்டி உணவகத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வாழைத்தண்டு சூப், முருங்கை இலை சூப், காய்கறி சூப், சுண்டல் வகைகள், நவதானிய சுண்டல், நவதானிய இட்லி, கேப்பைப் புட்டு, கேப்பை இடியாப்பம், சம்பா அரிசி இடியாப்பம், நவதானிய தோசை, குதிரைவாலி அரிசி தோசை, ஊளுந்த கஞ்சி, ஊளுந்த களி, மொச்சை, சுக்கு காபி, கீரை வடை, காரமணி வடை, வாழைப்பூ வடையும், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை வரகு அரிசி பிரியாணி, தினை பிரியாணி, சாமை அரிசி தயிர் சாதம், சாமை அரிசி பிரியாணி, குதிரைவள்ளி சாம்பார் சாதமும்,
மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை அவல் சுண்டல், கொண்டை கடலை சுண்டல், திட்டப்பயறு சுண்டல், பாசிப்பயறு சுண்டல், நிலக்கடலை, சுக்கு காபி, கேப்பை தட்டை, கீரை வடை, வாழைப்பூவடை, சிறுதானியப் பணியாரமும் (காரம்;/இனிப்பு), வாழை இலை அல்வா, தினை பாயாசம், நவதானிய லட்டு உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.