தூத்துக்குடி சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா : மார்ச் 8ம் தேதி தொடக்கம்!
தூத்துக்குடி சிவன் கோவிலில் வரும் 8-ம் தேதி சிவராத்திரி விழா மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி திருவிழா வருகிற மார்ச் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இந்த ஆண்டு ஒரே நாள் வருகிறது. மார்ச் 8ஆம் தேதி வரும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது நல்லது. அதேநாள் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரியும் வருகிறது. இந்த இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் அன்று உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் கலந்து கொண்டு வணங்குவது மிக சிறப்பு. மகா சிவராத்திரிப் பெருவிழா நாளன்று, கோவிலில் இரவில் நடை திறந்திருக்கும்.
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஒரே நாளில் வருவதையொட்டி பக்தர்களின் நலன்கருதி அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, சிவன் கோவில் உள் அரங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் (எ) செல்வம் பட்டர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்:
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். இதனையொட்டி வழக்கம் போல் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணிக்குள் நிறைவு பெறும்.
அதன் பின் சிவராத்திரி நிகழ்வையொட்டி கோவிலுக்கு ஓம் நமச்சிவாய எழுத வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைப்பு பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும். அன்று இரவு 10, 12, 2, 5 என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிதில் வந்து தரிசனம் செய்து கொள்வதற்கான உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. உள்ளே வந்து, வெளியே செல்வதற்கான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து காவல்துறை மூலம் சீர்செய்யப்படும்.
இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த காலத்தில் நடைபெற்றதை விட இந்தாண்டு சிறப்பான முறையில் இரு நிகழ்வுகளையும் பக்தர்கள் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பிரதோஷம், சிவராத்திரியை முன்னிட்டு அச்சமின்றி வந்து செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சிவராத்திரி திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில்,நான்கு இடத்தில் பெரிய அகன்ற எல்ஈடி திரை மூலம் காட்சிகள் ஒளிபரப்பும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை, கோவில் பின்புறம் தனியார் பள்ளி இருக்கும் சாலை ஓரங்களில் நிறுத்த கேட்டுக்கொள்கிறோம். என்று தெரிவித்தார்கள்.
பேட்டியின் போது, பெருமாள் கோவில் அறங்காவல்குழு தலைவர் செந்தில் குமார், சிவன் கோவில் அறங்காவல்குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், சிவன் கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காலர்கள் முருகேஷ்வரி, ஜெயபால், பாலசங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.