தூத்துக்குடியில் ரூ.11.30 கோடியில் செயற்கைப் பவளப் பாறைகள் அமைக்கும் பணி துவக்கம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் அமைக்கும் திட்ட தொடக்க விழா தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், முதல்கட்டமாக சிங்கித்துறை மீனவக் கிராமத்தில் செயற்கை பவளப்பாளைகள் அமைக்கப்படும் பணிக்கு, தருவைகுளத்திலிருந்து கடல் வழியாக செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டுசெல்லும் பணியினை மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இவ்விழாவில் அவா் பேசியது: தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறும் வயது வரம்பை அகற்றிவிட்டு, மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கும் காலம்வரை ரூ.8ஆயிரம் வழங்கப்படும். மீனவா்களுக்கு எந்த குறையும் இல்லாத அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த 49 மீனவ கிராமங்களின் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் நிறுவ ரூ.62 கோடி திட்ட மதிப்பிட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆலந்தலை, புன்னக்காயல் மற்றும் மணப்பாடு ஆகிய 5 மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் தலா 190 செயற்கைப் பவளப்பாறைகள் ரூ.11.30 கோடி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக சிங்கித்துறை கிராமத்தில் 6 இடங்களில் செயற்கைப் பவளப்பாறை அமைக்கப்படவுள்ளது.
தொடா்ந்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் வரும் 31ஆம் தேதிக்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் பளைப்பாறைகளில் மீன்குஞ்சுகள் அதிக அளவில் உற்பத்தியாகி, கடல் மீன் உற்பத்தி அதிகரிக்கும் மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், மீன்வளம்-மீனவா் நலத்துறை தலைமைப் பொறியாளா் வீ.ராஜூ, மீன்வளத்துறை உதவி இயக்குநா் கு.அ.புஷ்ரா ஷப்னம், உதவிப் பொறியாளா் தயாநிதி, ஒட்டப்பிடாரம் ஒன்றியக்குழுத் தலைவா் எல்.ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.