100 ரூபாய் அதிகமாக எடுத்துச்சென்றதால் சிக்கினான்..? தேர்தல் அதிகாரிகளிடம் ரூ.50,100 பணத்தை இழந்த சிறுவன்!

 100 ரூபாய் அதிகமாக கொண்டு சென்ற 17 வயது சிறுவன் ஒருவனிடம் தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலே ஒவ்வொருவரும் பணம் கொண்டு செல்ல படாதபாடு படும் நிலை தான் உருவாகிறது. வியாபாரிகள், வர்த்தகர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை கொண்டு செல்லும் சூழ்நிலைகளில் தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்கிறார்கள். உரிய ஆவணங்களை அளித்து அதை மீட்பதற்கு போதும் போதும் என்றாகி விடுகிறது.

அதே நேரம் ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், தேர்தல் செலவுக்கு அள்ளி வழங்கவும் அரசியல் கட்சியினரிடம் பணம் புழங்குவது எல்லாக் காலத்திலும் நடக்கிறது. அவற்றை தேர்தல் அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

இப்படி இருக்கையில் வெறும் 100 ரூபாய் அதிகமாக கொண்டு சென்றதற்காக, தான் கொண்டு வந்த 50 ஆயிரத்து 100 ரூபாயை அதிகாரிகளிடம் பறிகொடுத்து இருக்கிறான் திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன். 

திருப்பூர் பெருமாநல்லூர் அருகே தோட்டக்கலைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, 17 வயது சிறுவன் சலாவுதீன் என்பவர்  ரூ.50 ஆயிரத்து 100 ரூபாய் பணம் கொண்டு சென்றதை அடுத்து அந்த பணம் தேர்தல் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. 

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நேரத்தில் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்ல அனுமதி உள்ள நிலையில் 50 ஆயிரத்து 100 ரூபாயை கொண்டு சென்றதால் சிறுவனிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

50 ஆயிரம் ரூபாய் கொண்டு செல்ல அனுமதி உள்ள நிலையில் 50 ஆயிரத்து 100 ரூபாயை கொண்டு சென்றதற்காக தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். 100 ரூபாய் தானே அதிகம் கொண்டு சென்று இருக்கிறான். உரிய விசாரணை நடத்தி உடனே பணத்தை கொடுத்தே அனுப்பி இருக்கலாம். ஆனால் பணத்தை பறிமுதல் செய்து இருக்கிறார்கள் தேர்தல் அலுவலர்கள். 

இதே போல திருப்பூர் திருமுருகன்பூண்டி செட்டிபாளையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வேளான்மை துறை அலுவலர் சுனில் கவுசிக் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் அந்த பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.85 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

Previous Post Next Post