கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்சத்து 34 ரூபாய் பறிமுதல்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தெற்கு குருவிகுளத்தில் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.73,700 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பொறிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோன்று கோவில்பட்டி அருகே திட்டங்களும் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர் அதில் 60 ஆயிரத்து 400 ரூபாய் இருப்பது தெரியவந்தது. எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகளை விற்ற பணம் என்று வாகனத்தில் இருந்தவர்கள் கூறினார்கள். இருந்தபோதிலும் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.