*கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை பணியமர்த்த வேண்டும்*
தென்னக இரயில்வே மதுரை கோட்டம் கோவில்பட்டி இரயில் நிலையம் பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் தமிழ் மொழி அறிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கோவில்பட்டி இரயில் நிலையத்திற்கு வருகை தந்த மதுரை கோட்ட முதன்மை பொறியாளர் கார்த்திக்யிடம் மனு கொடுக்கப்பட்டது.
தென்னக இரயில்வேயில் மதுரை கோட்டத்தில் அதிகமான வருமானம் ஈட்டித்தருவது கோவில்பட்டி இரயில்வே நிலையமாகும். தூத்துக்குடி, விருதுநகர் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் கோவில்பட்டி மார்க்கமாக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையத்தில் ஒரேயொரு பயணச்சீட்டு கொடுக்கும் அறை இருப்பதாலும் தமிழ் தெரியாத பணியாளர் பணிபுரிவதாலும் இரயில்வே பயணிகள் பயணச்சீட்டு பெறுவதில் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள்
எனவே கோவில்பட்டி இரயில் நிலையத்தில் கூடுதலாக பயணச்சீட்டு வழங்கும் மையங்களை திறந்திடவும் , தமிழ் மொழி அறிந்தவர்களை பணியில் அமர்த்திடவும், மேலும் கோவில்பட்டியில் நின்று சென்று கொண்டிருந்த பல இரயில்கள் கொரோனா காலத்திற்கு பிறகு நிற்க்காமல் செல்கிறது. எனவே மேற்படி நிறுத்தப்பட்ட இரயில்களையும் , வந்தேபாரத் உள்பட புதிய இரயில்களையும் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ரவிகுமார், கூட்டமைப்பின் பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், INTUC ராஜசேகரன், வழக்கறிஞர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- அஹமத்
புகைப்படம் - சித்திக்