திருவிடைமருதூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரவுடிசம், கஞ்சா விற்பனை, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றச்சம்பவங்கள் நடந்து வந்தன. குற்றவாளிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும் குற்றங்களையும், குற்றவாளிகளையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல் வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக ஜாபர் சித்திக் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளார். குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளில் இதுவரை 703 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். 28 குற்றவாளிகள் மீது குண்டாஸ் போடப்பட்டு சிறையில் அடைத்துள்ளார். ஜாபர் சித்திக் அதிரடியால் திருவிடைமருதூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளதாக மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளார்.
மேலும், குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களை பாராட்டுவதோடு அவர்கள் பற்றிய ரகசியங்களை வெளியிட மாட்டோம் என அவர்களுக்கு உறுதி அளித்துள்ளதால் தைரியத்துடன் குற்றவாளிகள் தொடர்பான தகவலை ஜாபர் சித்திக்கிடம் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே குற்றவாளிகளை தடுக்கும் சூழலை ஜாபர் சித்திக் உருவாக்கியுள்ளார்.
பொதுமக்கள் எந்த வித அச்சமும் இன்றி தன்னிடம் நேரடியாக அணுகி புகார்களை தெரிவிக்கலாம் எனவும், சிபாரிசுடன் சட்டத்துக்குப் புறம்பாக வருபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
தன்னுடைய பணியைத் தாண்டி பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சாலைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் வைத்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலதாமதம் ஏற்படும் புகார்களை தன்னிடம் நேரடியாக பொதுமக்களை நேரடியாக அனுக வைத்து புகார்களுக்கான தீர்வுகளை பெற்று தந்து கொண்டிருக்கிறார்.
திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக ஜாபர் சித்திக் பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்கள் தைரியத்துடன் நடமாடும் சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.