.
*கோவில்களில் கெட்டுப்போன பிரசாத விற்பனையை தடுப்பீர், மக்களை பாதுகாப்பீர்! என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை!* கோவில்களில் கெட்டுப்போன காலாவதியான பிரசாதங்களை விற்பனையை தடுப்பீர், மக்களை பாதுகாப்பீர் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். கோவில்களில் காலாவதியான பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கேரளாவிற்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் குற்றம் சாட்டிய பிறகு,தமிழ்நாட்டில் பழனி முருகன் கோவிலிலும் காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும். பக்தர்கள் தங்களுடைய மனக்குறைகள் நீங்கிட இறைவனை வேண்டி தவமிருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபட்ட பிறகு அங்கே விற்கப்படுகின்ற பிரசாதங்களை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல இயலாத வயதில் முதிர்ந்த பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடைவது எங்கும் காணும் செயலாகும். அப்படிப்பட்ட உன்னத நிலையில் கோயில்களுக்கு சென்று வரும் பக்தர்கள் அந்தந்த கோயில்களில் விற்கப்படுகின்ற பிரசாதங்களை கடவுள் கொடுக்கும் பிரசாதமாக எண்ணி நம்பி அதனை வாங்கிச் செல்கின்றார்கள். ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் நேந்திரம் சிப்ஸ் மற்றும் பழனிக்குச் செல்லும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தையும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் லட்டு என்று அந்தந்த கோயிலுக்குள்ள பிரசித்தி பெற்ற நிவேத்திய பிரசாதங்களை வாங்கிச் சென்று புனிதமாக கருதி உண்ணுகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில்கூட அங்கே விற்கப்படும் இனிப்பு வகையில் பல்வேறு பூச்சிகள் எறும்புகள் இருந்ததை கண்டு கடந்த ஆண்டு நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற பொழுது கோவில்கள் மட்டுமல்லாமல் இதர மத வழிபாட்டுத் தலங்கள் சர்ச், மசூதி போன்ற இடங்களிலும் விற்கப்படும் அனைத்து தின்பண்டங்களையும் உணவு பாதுகாப்புத் துறை தானாக முன்வந்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பிரச்சனை எழும்பொழுது மட்டுமே ஆய்வுக்கு செல்வது என்பது ஏற்புடையதல்ல. ராணுவத்தைவிட மிக முக்கியமான பணி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் பணி என்பதனை மறந்துவிட வேண்டாம். எல்லையில் நம்மை கொள்ள வருகின்ற தீவிரவாதிகளை, தன்னுயிர் ஈந்து ராணுவத்தினர் நம்மைக் காப்பது போல கெட்டுப்போன காலாவதியான தின்பண்டங்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுத்தும், படு பாதக செயலை மேற்கொள்ளும் மனசாட்சியற்ற வியாபாரிகளை சட்டத்தின் துணை கொண்டு தடுத்து நிறுத்தும் பொறுப்பினை உணவு பாதுகாப்புத் துறை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகமாக வரும் கோவில்களில் பக்தர்களின் பரபரப்பை பயன்படுத்தி கொண்டு இப்படிப்பட்ட காலாவதியான பஞ்சாமிர்தம், அதிரசம், முறுக்கு, லட்டு,வடை, அல்வா போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி பக்தர்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.