"தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம். கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்" - தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தூத்துக்குடி சூசை பாண்டியாபுரத்தில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால். பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
கன்மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல். மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
அதிகனமழையால் திருநெல்வேலி மற்றும் நூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பிற்குள்ளான பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் 21.12.2023 அன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.” என்றார். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகள், நிதி உதவிகள், அம்மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
அத்துடன், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி, “விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்" அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்" அமைக்கப்படும். இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும். தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.” ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதேபோல், நெல்லை மாவட்டத்துக்கு, “அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது.” ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி விரைவில் வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். “இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம். ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை; தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம். கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்.” என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நூத்துக்குடி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் வருமாறு:-
கூட்டுறவு துறை சார்பில், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக் கடன், மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், சிறப்பு சிறு வணிகக் கடன். கால்நடை கொள்முதல் கடன், என மொத்தம் 4446 பயனாளிகளுக்கு 24 கோடியே 54 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள். முழு சேதம் / காணாமல் போன மரப் படகு / பைபர் நாட்டுப் படகு பகுதி சேதமடைந்த பைபர் நாட்டுப்படகு. வலைகள் மற்றும் இயந்திரம் சேதம், மீன் பண்ணைகள் சீரமைத்தல், உள்நாட்டு மீனவர்களின் காணாமல் போன வலைகள், என அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 5137 பயனாளிகளுக்கு 11 கோடியே 91 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகள்:
வேளாண்மைத் துறை சார்பில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 1.28,205 பயனாளிகளுக்கு 97 கோடியே 59 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள் மற்றும் தோட்டக்கலை துறையில் 41,498 பயனாளிகளுக்கு 25 கோடியே 88 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள்:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 150 பயனாளிகளுக்கு 12 கோடியே 43 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கான கடனுதவிகள்:
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 3845 பயனாளிகளுக்கு 132 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:
என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,83,301 பயனாளிகளுக்கு 305 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்:-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட தலா 4 இலட்சம் ரூபாய் வீதமும். பழுது நீக்க தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும், 779 பயனாளிகளுக்கு 17 கோடியே 98 இலட்சம் ரூபாய் நிதியுதவி:
கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வாங்கிட 4608 பயனாளிகளுக்கு 47 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் கடனுதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடனாக 2032 பயனாளிகளுக்கு 6 கோடியே 46 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கடனுதவி. கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற 202 பயனாளிகளுக்கு
கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்குவதற்கான ஆணைகள்:
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீர்செய்திட 8 பயனாளிகளுக்கு 1 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதியுதவி:
வேளாண்மைத் துறை சார்பில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கிடும் வகையில், 12,300 பயனாளிகளுக்கு 8 கோடியே 93 இலட்சம் ரூபாய் நிவாரண உதவிகள் மற்றும் தோட்டக்கலை துறையில் 1305 பயனாளிகளுக்கு 68 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள்: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் 327 பயனாளிகளுக்கு 8 கோடியே 21 இலட்சம் ரூபாய் கடனுதவி:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 210 மகளி சுயஉதவிக் குழுக்களுக்கு 16 கோடியே 15 இலட்சம் ரூபாய் கடனுதவி:
மீன்வளத்துறை சார்பில் மழை வெள்ளத்தால் படகுகள். எஞ்சின்கள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் 1053 மீனவர்களுக்கு 2 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி:
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மழை வெள்ளத்தால் கால்நடைகளை இழந்த 1051 விவசாயிகளுக்கு 6 கோடியே 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி;
பள்ளிக்கல்வித் துறை சார்பில் மழை வெள்ளத்தால் LIML புத்தகங்களை இழந்த 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 4803 மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்குதல்:
வருவாய்த் துறை சார்பில் அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு 55 இலட்சம் ரூபாய் நிதியுதவி. 6647 கால்நடை உயிரிழப்பிற்கு 1 கோடியே 68 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, சேதமடைந்த வீடுகளின் 1553 பயனாளிகளுக்கு 1 கோடியே 49 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதியுதவி: போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1556 வாகனங்கள் பழுது நீக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் வாகனங்களை இழந்த 69 பயனாளிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
மொத்தம் திருநெல்வேலி மாவட்டத்தில் 38,514 பயனாளிகளுக்கு 118 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் தூத்துக்குடி பெருவெள்ளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளாக மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன். ஊர்வசி செ. அமிர்தராஜ், அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்
மரு.கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: அஹமத் ஜான்
புகைப்படம் : சித்திக்