*மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை !* மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட மணல்மேடு,கொள்ளிடம் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக 300 மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி வியாபாரம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை, திருவையாறு, மற்றும் மதுரை திருச்சி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்றின் கரையோர பகுதிகளில் மணல் அள்ளி, மாட்டு வண்டிகள் வாயிலாக விற்பனை செய்து நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் தங்கள் குடும்பத் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றங்கரையில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டு இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வருவாய் இன்றி மிகவும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு குவாரிகள் வாயிலாக ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் விற்பனை ஜரூராக நடைபெற்ற சூழலில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மட்டும் மணல் அள்ளக்கூடாது என்று தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பங்கள் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளுக்கான காளை மாடுகளும் இதன் மூலம் வாழ்கின்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்னும் அடிப்படையில் இக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து தீர்வு காணப்பட வேண்டும். திருவையாறுக்கு ஒரு சட்டம், மயிலாடுதுறைக்கு ஒரு சட்டமா என்று பொது மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து ஆளும் அரசுக்கு மிகுந்த கெட்டபெயர் ஏற்பட்டிருக்கின்றது. சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்க இப்பிரச்சனையை அரசு செவிமெடுத்து, 2024 பாராளுமன்ற தேர்தல் வரும் முன்பே ஏழை எளிய மாட்டு வண்டி தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையான மயிலாடுதுறை, மணல்மேடு, கொள்ளிடம் பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் அல்ல அனுமதியை உடனடியாக வழங்கி அவர்களின் வாழ்வில் விளக்கேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழ்நாடு அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.