கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளாததால் களையிழந்து காணப்பட்டது.
இந்திய - இலங்கை உறவினை பலப்படுத்தி இரு நாட்டு மக்களை இணைக்கும் அங்கமாக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் இருக்கிறது. இது கிறித்துவர்களின் புனித யாத்திரை தலமாகும். இந்த திருவிழாவிற்கு இந்திய தரப்பில் இருந்து ஆயிரக்கணக்கிலானவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. மேலும் படகோட்டிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்து வருகிறது. இதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களுடைய படகுகளில் கருப்புக்கொடி கட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை- இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவிற்கு இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து மீனவர்கள் மற்றும் பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் இந்திய தரப்பிலிருந்து கச்சத்தீவு திருவிழாவில் யாரும் பங்கேற்கப்போவதில்லை என வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்திருந்தார். இதனால் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை பக்தர்கள் மட்டும் பங்கேற்று உள்ளனர்.
இன்று மாலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவில் நெடுந்தீவு பங்குத்தந்தை , யாழ்ப்பாணம் பங்குத்தந்தை இலங்கை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று இரவு முழுவதும் பங்குத் தந்தைகள் ஜெப பிரார்த்தனையில் ஈடுபட்டு நாளை காலை புனித அந்தோணியார் தேர் பவனி உடன் இந்த திருவிழா நிறைவடையும் .
இந்தியா தரப்பில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கச்சத்தீவு திருவிழா களையிழந்து காணப்படுகிறது. இந்திய தமிழர்கள் செல்லாததால் இலங்கை தரப்பு மக்களும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தமிழர்களை நம்பி கச்சத்தீவு கடைகள் வைத்த பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-