அவிநாசி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்! தீர்த்தம் தெளிக்காததால் கோவிலுக்கு வெளியே நின்ற பொதுமக்கள் வேதனை

 அவிநாசியில் புகழ்பெற்ற பெருங்கருணைநாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தீர்த்தம் தெளிக்க சரியான ஏற்பாடுகளை செய்யாததால் பல்லாயிரக்கணக்கான கோவிலுக்குள் செல்ல முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. பக்தர்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர்.  

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாகக் கொண்டதும்,   முதலையுண்ட பாலனை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பாடல் பாடி, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் மீட்டெடுத்த தலம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்.  அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடைபெற்றது.அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ், மற்றும் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 

யாக பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று கோயிலில் தங்க முலாம் பூசிய சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக செய்யப்பட்டு நிறுவப்பட்ட கொடிமரம், கனக சபை, பாலதண்டாயுதபாணி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று என்குணத்தோன் ஆகிய அவிநாசி நாதருக்கு அதிகாலை எட்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது.  இந்த எட்டாம் கால வேள்விப் பூசை வரை நூறு சிவாச்சாரியர்களால் எட்டு லட்சம் ஆமந்திரங்கள் அர்ச்சிக்கப்பட்டு,   வேள்விப்பூசையில் வைக்கப்பட்டிருந்த திருக்குடங்களை சிவாச்சாரியர்கள்  சுமந்தவாறு திருக்கோயிலில் உலா வந்தனர்.


 இன்று காலை 09.17 மணியளவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம், ஐந்து நிலை கொண்ட அம்மன் கோபுரம், மூலவர்களான அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகையம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமான் சன்னதி ஆகிய ஐந்து கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் ஒரு சேர திருக்குடங்களில் கொண்டு வந்த புனித தீர்த்தத்தால்  கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பல்லாயிரம் பக்தர்களின் விண்ணைத் தொடும் நமச்சிவாய கோசங்கள் மத்தியில் மங்கள வாத்தியமும் தேவாரப் பாடலும் முழங்க கும்பாபிஷேகம் செய்தனர்.    அதைக்கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் கண்ணீர் மல்க இறைவனை வழிபட்டனர்.  ஹெலிகாப்டர் மூலமாக ராஜகோபுரங்களுக்கு மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு தன்னார்வளர்கள் சார்பில் பல்வேறு திருமணம் மண்டபங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.
  
     இந்த கோவில் விழாவில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டார்கள். ஏற்கனவே பல ஆயிரம் விஐபி பார்சல் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதால், சாதாரண மக்களை கோவிலுக்கு அருகாமையில் கூட அனுமதிக்கவில்லை. 

மங்கலம் மெயின் ரோடு, அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் ரோடு, உள்ளிட்ட பகுதிகளிலும் அருகில் உள்ள மாடிகளிலும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள்  திரண்ட நிலையில் கும்பாபிஷேகம் முடிந்து தீர்த்தம் தெளிக்க டிரோன் மூலம் ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்த நிலையில், தீர்த்தம் தெளிக்கப்படவில்லை. 

இதனால், கோவிலுக்குள் செல்வதற்கு பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு செல்ல முயன்றார்கள். ஆனால் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்காததால் உள்ளே செல்லக்கூடிய இரண்டு வழிகளிலும் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகளும் முதியோர்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் அவதி அடைந்தனர். 

நெரிசல் தாள முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தீர்த்தம் தெளிக்காமலே வேதனையுடன் வீட்டுக்கு சென்றார்கள். கும்பாபிஷேக விழாவை காணவும் முடியாமல், தீர்த்தமும் கிடைக்காமல் 200 மீட்டருக்கு தள்ளி நிற்க வைக்கப்பட்ட நிலையில் பல மணி நேரம்நெரிசலில் சிக்கி தவித்தபடி பொதுமக்கள் வீட்டுக்கு சென்றது  திருப்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில் நிர்வாகம் விஐபிகள் பெயரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாஸ் வழங்கிய நிலையில், மக்களை, வேண்டும் என்று சிரமப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தார்கள். மிக தாமதமாக கூட்டம் எல்லாம் திரும்பி சென்ற பிறகு ட்ரோன்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. 


Previous Post Next Post