தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் பிப் 21 வேலூர் மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தலைமையில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து , பார்வையிட்டார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி,இ.ஆ.ப. வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி ஆ. மீனாட்சி சுந்தரம் பரிசுகளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
மேலும் நுகர்வோர் நலன் குறித்த விளக்கவுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் / நீதிபதி ஆ. மீனாட்சி சுந்தரம் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.
நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையோ தன் பணத்தை கொடுத்து பெற்றுக் கொள்பவர். வாங்கிய பொருள் தரமாக உள்ளதா எனவும் எடை சரியாக உள்ளதா எனவும் சான்றளிக்கப்பட்டுள்ளதா எனவும் அறிந்து கொள்ள ஒரு பொருளை வாங்குபவர்களுக்கு உரிமை உள்ளது.
நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கவே மாண்பமை நீதிமன்றம் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தை அமைத்து பொதுமக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி வருகிறது.
நாம் அனைவருமே நுகர்வோர்கள். நமக்கு உரிமைகளும் கடமைகளும் உள்ளன. உரிமைகளை பாதுகாக்க நீதிமன்றங்கள் உள்ளன நம்முடைய கடமை என்னவென்றால் பெற்றோர் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் நமக்கு தேவையான பொருட்களை மட்டுமே நாம் வாங்க வேண்டும் என்பதே நம்முடைய கடமை.
வளர்ந்து வரும் இன்றைய உலகில் சந்தைகளில் நல்ல பொருட்களும் உள்ளன. உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களும் உள்ளன. பழம், காய்கறி, கீரை வகைகள் சிறு தானிய உணவுகள் நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. எனவே நுகர்வோராகிய நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் தரத்தை தெரிந்து கொண்டு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி ஆ. மீனாட்சி சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி , ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் இராமசந்திரன், துணைப்பதிவாளர் பொதுவிநியோக திட்டம் சுவாதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.