திருப்பூர் மாவட்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் இரண்டு ஆண்டில் 92 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இழப்பீடு பெற தாமதமாவதால் விபத்துகளில் சிக்குபவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக முடங்குகிறது. எனவே அரசு பஸ்கள் அனைத்துக்கும் இன்சூரன்ஸ் செய்யயப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலைப்போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது என்று பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான், நாட்டிலேயே அதிக அளவில் வாகன விபத்துக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதமும் இங்கே நிலவுகிறது. ``தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1.3 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். இதில் சுமாராக பாதி அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. இருந்த போதிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாநிலம் முழுக்க கிராமங்கள் வரை சேவைகளை வழங்கி வருகிறது. `
அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படாமல் இருப்பது, விபத்துகால இழப்பீடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை வாழ்வாதார பிரச்சினைகளுக்கு ஆளாக்குகிறது.
குறிப்பாக, திருப்பூர் மண்டலத்தில் மட்டும் 540 மேற்பட்ட பேருந்துகள் அரசு போக்குவத்து கழகம் மூலம் இயக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு பேருந்துகளினால் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விபத்து வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துகள் குறித்து 2021-ல் 30 வழக்குகள், 2022 இல் 32 வழக்குகள், 2023ல் 30 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2022 ல் 14 பேருந்துகளும், 2023ம் ஆண்டில் 78 பேருந்துகளும் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு ஜப்தி செய்யப்படும் பேருந்துகள் கோர்ட் வளாகத்திலோ அல்லது கோர்ட் கண்காணிப்பில் போக்குவரத்து கழக பணிமனைகளிலோ நிறுத்தி வைக்கப்படுகிறது. இதன்பின்னர் போக்குவரத்து கழக உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக கூறி உறுதிமொழி அளித்து பேருந்துகளை மீட்கிறார்கள். ஆனாலும் இழப்பீடு வழங்குவதில் தொடரும் இழுபறியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கழக வழக்குரைஞர் தங்கவேல் கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளில் 92 பேருந்துகள் இழப்பீடு வழங்காமல் ஜப்தி செய்யப்பட்டு உள்ளது. பின்னர் இதுகுறித்த உறுதிமொழியின் பேரில் பேருந்துகள் விடுவிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனாலும் பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்காமல், தவணை முறையில் வழங்குகிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதிப்படைவது அதிகமாக இருக்கிறது. எனவே போக்குவரத்து கழகத்துக்கு விபத்து இழப்பீட்டுக்கென அரசு தனியாக நிதி ஒதுக்கிட வேண்டும் என்றார்.