தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருந்த 302டன் மண் துகள்கள் அகற்றம் - மேயர் நடவடிக்கை.!
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சி தரைவழி, கடல்வழி மற்றும் ஆகாய மார்க்கம் என மூன்று வழி போக்குவரத்து வசதிகளை பெற்று மணற்பாங்கான கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள நகரமாக இருப்பதால் சாலைகளில் மண் தூசி துகள்கள் அதிகப்படியாக சேர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், தேசிய காற்று தூய்மை திட்டத்தின் தமிழ்நாட்டில் கவனம் செலுத்த வேண்டி பட்டியலிடப்பட்டுள்ள 4 நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சாலை ஓரங்களில் சேரும் மண் துகள்களை கூடுதல் கவனம் செலுத்தி அகற்ற மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் அறிவுறுத்தப்பட்டதன் பேரில் முதற் கட்டமாக மாபெரும் சிறப்பு சாலை தூய்மை பணி 22.02.2024 முதல் 24.02.2024 வரையிலான மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி 3 நாட்களில் நகரின் பிரதான சாலைகளான எட்டையாபுரம் ரோடு, புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள், பாளை ரோடு, தமிழ்சாலை, விஇரோடு, ஜெயராஜ் ரோடு, விவிடி ரோடு, காமராஜ் சாலை, திருச்செந்தூர் மெயின் ரோடு போன்ற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதில் 302டன் அளவிலான மண் துகள்கள் அகற்றப்பட்டது.
இப்பணியில் 720 தூய்மை பணியாளர்கள் 24 வாகனங்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு கூட்டுத்துப்புரவு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் மற்றும் மாநகர் நல அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சுகாதார அலுவலர்கள் மேற்கொண்டனர். இப்பணியினை ஆய்வு செய்த மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் வருங்காலங்களில் இப்பணி திறம்படி மேற்கொள்ள நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் - அஹமத்
புகைப்படம் - சித்திக்