**மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் குளத்தின் கரை பகுதிகளை சீரமைத்து குப்பை கூளங்களை அகற்றி சுத்தம் செய்து தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சிக்கு கோரிக்கை!* மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சேந்தங்குடி துர்க்கையம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வெள்ளி, செவ்வாய் நாட்கள் மட்டுமல்லாமல், தினசரி அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள். கோவிலையொட்டி உள்ள குளத்தில் கிழக்கு கரையோரத்தில் குப்பைக் கூளங்கள் கொட்டப்பட்டு மிகவும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகின்றது. அதோடு கூட செடிகள் கொடிகள் புதர்கள் மண்டியும் கிடைக்கின்றன. இக்கோயிலுக்கு சீர்காழி சாலையில் இருந்து வருபவர்கள் குளத்தில் கரைகளில் உள்ள சுகாதாரமற்ற சூழலையும் துர்நாற்றத்தையும் பார்த்து மிகவும் முகம் சுளிக்கிறார்கள். பல நேரங்களில் பன்றிகள் நாய்கள் அங்கே கழிவுகளை கடித்து இழுத்து வந்து சாலை முழுவதும் கொட்டி சிதறி விடுகின்றன. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் நடந்தோ இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மேலும் பூம்புகார் சாலையில் இருந்து கோயிலுக்கு வரும் சாலையும் மிக மோசமாக பள்ளம் மேடுகளாக காணப்படுகிறது. மயிலாடுதுறையின் வடக்கு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இப்பகுதி வழியாக தான் தினசரி சென்று வருகிறார்கள். ஆகவே பொதுமக்கள் பக்தர்கள் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் சாலை மற்றும் இப்பகுதியை மேம்படுத்தி தரவும் மேற்படி இடத்தில் குப்பை கொட்டாமலும் சுத்தம் சுகாதாரத்தை பேணிக் காக்கவும் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்திற்கு பக்தர்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.