*தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை கடலூர் மாவட்ட கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் நிவாரணப் பணி!*
தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் நிவாரணப் பணி இன்று (2024.01.10. புதன்கிழமை) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள கணபதி சமுத்திரம், தண்ணீர் பந்தல், பேயன்விளை, காயல்பட்டினத்தில் உள்ள அருணாச்சலபுரம், தேங்காய் பண்டகசாலை, அழகாபுரி, ஏஐடியுசி காலனி, பாரதி நகர், மங்களவாடி உள்ளிட்ட பகுதிகளில்,
கடந்த 2023 டிசம்பர் 17 முதல் 19ஆம் நாள் வரை தொடர்ந்து பெய்த கனமழை பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் அடங்கிய பொதிகளும், நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட தலைவர் மவ்லவீ எஸ். முஹம்மத் அலீ மன்பஈ, செயலாளர் என்.எஸ். அப்துஸ் ஸலாம் தாவூதீ, துணைச் செயலாளர் எச். முஹம்மத் யஹ்யா மன்பஈ, கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவீ எஸ். அபூபக்கர் அன்வாரீ ஆகியோர் - பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
மழை வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களும், நிவாரண உதவித் தொகையும் வழங்கப்பட்டன.
ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் அதன் தலைவர் மவ்லவீ டீ.எம்.என். ஹாமித் பக்ரீ மன்பஈ நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை காயல்பட்டினம் நகர தலைவர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, செயலாளர் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ, பொருளாளர் மவ்லவீ என்.எஸ். மாமுனா லெப்பை காஷிஃபீ, காயல்பட்டினம் பேரிடர் நிவாரணக் குழு ஒருங்கிணைப்பாளரும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளருமான ஹாஃபிள் எஸ்.கே. ஸாலிஹ், குழு உறுப்பினர் ஹாஃபிள் எம்.எஸ். முஹம்மத் அப்துல் காதிர் நியாஸ் ஆகியோர் இணைந்து களப்பணியாற்றினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல முன்னாள் செயலாளர் சொ.சு. தமிழினியன், அதன் சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, ஆழ்வை ஒன்றிய கிழக்கு செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் வீரப்பன், காயல்பட்டினம் நகர செயலாளர் அம்பேத் ஆகியோர் நிவாரணக் குழுவினருக்கு வழிகாட்டுப் பணி செய்தனர்.