இமயமலை உச்சில 10 ஆயிரம் அடி ஒசரத்துல இருக்குற புண்ணியஸ்தலம்... பெருமாளும், மகாலட்சுமியும் கல்யாணம் பண்ணிக்கிட்ட அற்புதமான இடம்... ஆதிகுருவா நாராயணனே வந்து தவக்கோலம் பூண்ட பத்ரிவனம்...திருமங்கை ஆழ்வாரால மங்களாசாசனம் பாடப்பட்ட அற்புத கோவில்.. இப்படியே சொல்லிக்கிட்டே போனோம்னா, இன்னும் நாலு நாளைக்கு சொல்லலாம்... அவ்வளவு ஸ்பெஷாலிட்டி இருக்குற ஒரு முக்கியமான கோவில் தாங்க இமயமலைல இருக்குற பத்ரிநாத் கோவில்...
என்னடா வயசாயிடுச்சு உனக்கு... இப்பவே பத்ரிநாத் போகணுமா? அதெல்லாம் வயசான காலத்துல போற கோவில் அப்படி., இப்படின்னு சொல்லுவாங்க, அதையெல்லாம் கேட்காதீங்க.. ஏன்னா, நம்ம நாராயணமூர்த்திய மங்களாசாசனம் பண்ணுன திருமங்கை ஆழ்வார் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? வயசு இருக்கும்போதே பத்ரிநாத் வந்து சாமிகும்பிடுங்கப்பான்னு.. அந்த காலத்துலயே பாடி வச்சுருக்காங்க...
“வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” ன்ன்னு ஒரு அருமையான பாட்டுல பத்ரிநாராயணப்பெருமாள திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பண்ணிருக்காங்க... ஏன்னா பத்ரிநாத் கோவில் இருக்குற இமயமலைப்பகுதி 10,248 அடி உயரம் இருக்குங்க...உறை பனியா கொட்டுற இந்த உச்சி மலைல நடுங்குற குளிருல வந்து போறதெல்லாம் வயசாயிட்டா கஷ்டமாயிடும், அதனால வயசு இருக்கும்போதே வந்து பத்ரி விஷால கும்பிடுங்கன்னு சொல்லிருக்காங்க...
இந்த பத்ரிநாத் கோவில்ல்ல தான் நாராயணரும், மஹாலட்சுமியும் குபேரன கூப்பிட்டு வந்து பிரம்மாண்டமா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அதனால இந்த கோவில்ல திருமணத் தடை இருக்குறவங்க வந்து கும்பிட்டா சீக்கிரம் கல்யாணம் ஆகும்னு நம்பப்படுதுங்க...
ஸ்ரீமன் நாராயணன் மக்களை மகிழ்ச்சிப்படுத்த, வேதங்களை எல்லாம் உருவாக்கி தானே ஆதிகுருவா இருக்கணும்னு நரநாராயணனா இங்க அவதரிச்சுருக்கார். அவர் இங்க வந்து தவம் பண்ணினப்போ, மஹாலட்சுமி இலந்தை மரமா நின்னு நிழல் தந்தாங்களாம்.. அதனால தான் இந்த இடத்த பத்ரி வனம்ன்னு சொல்றாங்க...இங்க இருந்து தான் மனிதனுக்கு முதன் முதலா ஞானத்தை சொல்லித்தந்தாராம் நம்ம நாராயணர்.
இதுமட்டும் இல்லாம, ஒரு காலத்துல பிரம்மாவுக்கும், சிவபெருமானுக்கும் அஞ்சுதலை இருந்துச்சாம்.. இதனால பார்வதி தேவி கன்ஃப்யூஸ் ஆகி அதை சிவபெருமான்கிட்ட சொல்லிருக்காங்க.. உடனே கோபப்பட்ட சிவபெருமான் பிரம்மனோட அஞ்சாவது தலைய கிள்ளிட்டாராம், அதனால பிரம்மஹத்தி தோஷம் சிவபெருமானையே பிடிச்சு, அவரு கைல அஞ்சாவது தல ஒட்டிக்கிடுச்சு.. இந்த தோசம் தீரணும்னா பூலோகத்துக்கு போய் பதிவிரதை ஒருத்தங்க கிட்ட பிச்சை எடுத்தா தான் தீரும்னு சொல்லிருக்காங்க... சிவபெருமானும் நம்ம பத்ரிநாத் கோவில் இருக்குற இந்த இடத்துல வந்து மஹாலட்சுமிகிட்ட பிச்சை எடுத்தாராம். அப்ப தான் அவரு கைல ஒட்டிக்கிட்டு இருந்த தலை கீழ விழுந்துருக்கு.. அதனால இந்த இடத்த பிரம்ம கபாலம்னும் சொல்றாங்க.. இதனால இங்க முன்னோர்களுக்கு பிண்டம் கொடுக்குறது சிறப்புன்னு சொல்றாங்க.. நிறைய பேர் அத செய்யறாங்க...
இதுமட்டும் இல்லிங்க பத்ரிநாத் கோவில், 108 திவ்யதேச கோவில்கள்ல 99 வது திவ்யதேசமா இருக்கு...1100 வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்த ஆதிசங்கரர் இப்போ இருக்குற நாராயண மூர்த்திய பிரதிஷ்டை பண்ணிருக்கார்..
இப்படி இவ்ளோ ஸ்பெஷாலிட்டி இருக்குற புண்ணியதலமான பத்ரிநாத்துக்கு ஒவ்வொரு வருஷமும் கடுமையான குளிரு, கஷ்டமான பயணம் எல்லாத்தையும் தாண்டி லட்சக்கணக்குல பக்தர்கள் வந்து போறாங்க...
பெரும்பாலும் பத்ரிநாத் வர்றவங்க கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் அப்புறம் பத்ரிநாத்னு இந்த நாலு புண்ணியதல பயணமாத்தான் வர்றாங்க...
உத்தரகாண்ட் மாநிலத்துல இருக்குற சாமோலி மாவட்டத்துல உறைபணி பெய்யுற இமயமலைல இருக்குற இந்த கோவில், கங்காநதியின் மூலநதியா இருக்குற ஆலக்நந்தா ஆத்தோட கரையில இருக்கு. கோவிலுக்கு வலது பக்கம் நீலகண்டா மலை இருக்குங்க...
1800கள்ல இப்போ இருக்குற கோவில கர்வாலி மன்னர்கள் தான் கட்டிருக்காங்க.. மத்தியான நேரத்துல கூட உறைய வைக்குற குளிர்ல ஸ்வெட்டர், குல்லா எல்லாம் போட்டுக்கிட்டுத் தான் இந்த கோவிலுக்கு போக முடியும்..
ஆலக்நந்தா ஆத்துப்பாலத்த கடந்து அப்படியே கீழே வந்தோம்னா தப்த குண்டம், கூர்ம குண்டம், பிரகலாத தாரா, நாரததாரா, ரிஷி கங்கான்னு அஞ்சு தீர்த்தம் இருக்கு.. இதுல தப்த குண்டம்ங்கற ஊத்துல இருந்து வர்ற தண்ணி சுடுதண்ணியா வருது... இதுல குளிக்குறதுனால பாவங்கள் எல்லாம் நீங்கிடும். அதனால கூட்டம் கூட்டமா வந்து மக்கள் குளிச்சுட்டு கோவிலுக்கு போறாங்க...
பத்ரிநாத் கோவிலோட முன்னாடி பக்கம் வண்ணமயமா இருக்கு.. இமயமலை பேக்ரவுண்ல கோவில் கலர்ஃபுல்லா இருக்கு... கொஞ்ச நேரம் லைன்ல நின்னு உள்ளே போனோம்னா, பத்ரிநாராயணர தரிசனம் பண்ண முடியுது. 1100 வருஷத்துக்கு முன்னாடி ஆதி சங்கரர் பண்ணி வச்ச சாளக்கிரம மூர்த்தியா அருள்பாலிக்குறாரு நாராயணர்... ஆதிசங்கரர் காலத்த்துல இருந்து இப்போ வரைக்கும் கேரள நம்பூதிரிங்க தான் இங்க பூஜைகள் எல்லாம் பண்றாங்க...
கடுமையான மலைப்பயணம், குளிர் எல்லாம் தாண்டி கஷ்டப்பட்டு வந்தாலும் இங்க வந்து நாராயணமூர்த்திய பார்த்ததுமே ஆனந்தமா இருக்குது.. இதுக்காகவே பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்தும் தினமும் ஆயிரக்கணக்கானவங்க வந்து போறாங்க..
அப்படியே சாமி தரிசனம் பண்ணிட்டு நகந்தோம்னா மகாலட்சுமி, கருடன், குபேரன், ஆதி சங்கரர், பரம்பரர் எல்லோரும் இருக்காங்க.. கோவில் வளாகத்த சுத்தி வந்து நல்லபடியா கும்பிட்டுட்டு வரலாம்.. அந்த நாராயணமூர்த்தியே ஆதிகுருவா வந்து உட்கார்ந்த இடத்துல, மகாலட்சுமி தேவி நிழல் தந்த இடத்துல நாம வந்து நிக்குறோம்ங்கறது கனவா, இல்ல நெஜமான்னு தெரியாது.. அந்தளவுக்கு ஒரு பரவசமான அனுபவம் தான் இது..
பத்ரிநாத் கோவிலுக்கு போறது எப்படின்னு பார்த்தோம்னா... நம்ம ஊர்ல இருந்து ட்ரெயின் இல்ல ஃபிளைட்ல டெல்லி வந்துடணும், அங்க இருந்து ஹரித்வார் வந்துட்டோம்னா.. ஹரித்வார், ரிஷிகேஷ்ல இருந்து பத்ரிநாத் போறதுக்கு தினமும் அதிகாலைல பஸ் வசதி இருக்கு...கங்கை நதிக்கரையோரம் இமயமலை மடிப்புகள்ல பஸ்ல போறது ஹேப்பியா இருக்கும். தேவப்பிரயாகை, ருத்ரபிரயாகை, கோபேஸ்வர், ஜோஷிமத்ன்னு முக்கியமான இடங்கள நெறையா பார்க்கலாம்... நேரடியா பத்ரிநாத் மட்டும் போலாம்னு முடிவு பண்ணினா தாராளமா பஸ்ல போயிட்டு வரலாம்... 2023 வது வருஷ கணக்குப்படி, சிக்கனமா போயிட்ட்டு வர்றதுக்கு ஒரு ஆளுக்கு 10 ஆயிரம் ரூபா செலவாகும்.
டெல்லி வரைக்கும் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட், சாதாரண சாப்பாடு, சாதாரண ரூம்ன்னு சிக்கனமா செலவு பண்ணனும்..
பணம் பிரச்சினை இல்லப்பா.. சேஃப்டியா போயிட்டு வரணும்... மொழி தெரியாது.. குளிரு எப்படி இருக்குமோ.. ஹில் டிராவல்ல வாமிட் வருமேன்னு நினைச்சீங்கன்னா குரூப் டிராவல்ல போயிட்டு வரலாம்.. மொத்தத்துல பத்ரிநாத் போயிட்டு வர்றதுன்னு முடிவு பண்ணிட்டா உடனடியா போயிட்டு வாங்க..