*மயிலாடுதுறைக்கு புறவழி சுற்றுவட்ட சாலை அமைப்பதை விரைவு படுத்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை கடந்த 2020 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கியது முதல் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகள் 114 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்று விரைவில் திறப்பு விழா காண உள்ளது. அதேபோல மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய அமைக்கும் பணியும், தற்போது மணக்குடி கிராமத்தில் 24 கோடியில் துரிதமாக நடைபெற்று வருகிறது. பெரும்பகுதி இவ்வாண்டுக்குள் புதிய பேருந்து நிலைய பணிகள் நிறைவுற்று திறக்கப்படும் வாய்ப்பும் உள்ளதால் மயிலாடுதுறைக்கான சுற்று வட்ட சாலை எனப்படும் புறவழிச் சாலையை விரைந்து அமைத்திட வேண்டும் என்னும் கோரிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.மேலும் 2009 ஆம் ஆண்டே அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டும்கூட கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகியும் நில ஆர்ஜிதம் செய்யும் பணி முழுமை பெறாமலும், அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியும் தொடங்காமல் தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டே சென்று காலம் கடந்து கொண்டே வருவது மக்களுக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. புதிய பேருந்து நிலையமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் முழுமையாக இயங்கத் தொடங்கும் பொழுது தரங்கம்பாடி சாலை, பூம்புகார் சாலை,சீர்காழி சாலை இம்மூன்று சாலைகளும் இணைக்கப்படும் சுற்றுவட்ட புறவழிச்சாலையும் அமைக்கப்படும் பொழுது மட்டுமே பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்க முடியும். அப்பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை துறையையும் அதற்காக அமைக்கப்பட்ட தனி அலுவலர்களையும் மாவட்ட ஆட்சியர் துரிதப்படுத்தி வேகப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மயிலாடுதுறை நகரின் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க ஒரே வழி புறவழி சுற்றுவட்ட சாலை அமைப்பது தான் ஆகும். மேலும் அதற்கான தற்போதைய நிலை குறித்த விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.