பள்ளி மாணவர்களை அவதூறாக பேசி மிரட்டிய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண் மற்றும் வாய் ஆகிவற்றில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் பயின்று வரக்கூடிய 60க்கும் மேற்பட்ட மாணவர்களை முடி வெட்டவில்லை என்பதற்காக அந்த மாணவர்களே அவதூறாக பேசியது மட்டுமின்றி, பல்லை உடைத்து விடுவேன் என்றும், பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்கி விடுவேன் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று தலைமையாசிரியர் கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கல்வி அதிகாரிகளின் உத்தரவினை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்களை அவதூறாக பேசியது மட்டுமின்றி, பல்லை உடைத்து விடுவேன், பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன் என்று மிரட்டிய பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண் மற்றும் வாய் ஆகிவற்றில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்,, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தியிடம் தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர்