திருப்பூர் மாநகர், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் இன்று, பிரதோஷ வழிபாட்டுக் குழு சார்பில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவிலின் கோசாலையில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர் வாழைமர வளைவுடன், முடக்கத்தான் கொடியினை கட்டியும், கன்னிமார்கள் முன்னிலையில் பட்டி கட்டி, குளத்தை தாண்டும் நிகழ்வும், தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக பட்டிப்பொங்கல் வைக்கப்பட்டு சுவாமிக்கு படையலிடப்பட்டது. இறுதியாக சுமார் 300 பக்தர்களுக்கு அன்னதான விருந்தும், பிரசாதமும் வழங்கபட்டது. பிரதோஷ வழிபாட்டுக்குழு நிர்வாகிகள் மணிகண்ணன், சுப்பிரமணியம், மனோகரன், சுந்தரராஜ், தனபால், செந்தில்குமார் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.