தூத்துக்குடி :குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


 தூத்துக்குடி :குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவை, தாமிரபரணி ஆறு மூலம் பெறப்படுகிறது. நகரின் குடிநீர் தேவையை   பூர்த்தி செய்ய,  முன்னாள் நகராட்சி மேயர் குரூஸ் பர்ணாந்து அவர்களின் பெரு முயற்சியால் வல்லநாடு பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு பைப் லைன் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தூத்துக்குடி டூவிபுரம் 10 ம் நம்பர் தெருவில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து  வெளியேறி வீணாக சாக்கடையில் கலக்கிறது. குடிநீர் குழாய் உடைந்து வீணாவது குறித்து அதிகாரிகள் கவனத்திற்க்கு கொண்டு சென்றும் அது சரி செய்யப்படாமல் கடந்த 13 நாளாக குடிநீர் வெளியேறி வீணாவது தெருவில் உள்ள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் குழாய் உடைப்பால் மீண்டும் தெருவில் தண்ணீர் தேங்குவதுடன், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி சென்று, கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. 

நகராட்சி ஆணையாளரின் வீடு, நகராட்சி பொறியாளரின் வீடு ஆகியவை அமைந்துள்ள தெருவிற்கு அருகிலேயே கடந்த 13 நாட்களாக ஆயிரக்க்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக செல்லும் நிலையில், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே அதிகாரிகள் குழாய் உடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post