தூத்துக்குடி மழை வெள்ளத்தில் வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு பெறுவதற்கான சிறப்பு நிவாரண முகாம் - ஆட்சியர் தொடங்கி வைத்தார்.!


 தூத்துக்குடி மழை வெள்ளத்தில் வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு பெறுவதற்கான சிறப்பு நிவாரண முகாம் - ஆட்சியர் தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ளத்தில் வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு பெறுவதற்கான சிறப்பு நிவாரண முகாமை துவக்கி வைத்து 1704 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 265 வாகனங்களுக்கு ரூ.19.82 இலட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொருள் சேதமடைந்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்து இழப்பீடு தொகை பெற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (01.01.2024) மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்குரிய இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, துவக்கிவைத்து பார்வையிட்டு தெரிவிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் அதிக கனமழை பெய்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்களுக்கு அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கும் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் காப்பீடு செய்துள்ளதை வைத்து அவர்களுக்கு உடனடியாக காப்பீடு நிறுவனம் மூலம் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களை வரவழைக்கப்பட்டு இந்தசிறப்பு முகாமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்பொழுது வரை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் 378 விண்ணப்பங்களும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் 554 விண்ணப்பங்களும், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 596 விண்ணப்பங்களும், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 176 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,704 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாகன ஆய்வாளர்கள் மூலம் தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருவதுடன், தற்பொழுது வரை 265 வாகனங்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.19.82 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கும் விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி வீடுகளில் பயன்படுத்தி வந்த மின்சாதனப் பொருட்களுக்கு காப்பீடு செய்திருந்தால் அதற்கும் உரிய இழப்பீடு பெற்றிடும்வகையில் மேற்கண்ட காப்பீடு நிறுவனங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே இந்த சிறப்பு முகாமில் காப்பீடு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் உடனடியாக வருகை தந்து விண்ணப்பித்து பயன்பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முகாமில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர்விநாயகம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில்குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன்,மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post