சொத்து பிரச்சனையில் தாயை அடித்துக் கொன்ற மகன்: 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை.!
தூத்துக்குடி சக்தி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை மனைவி கலைச்செல்வி (67). இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரூபிசன் (40), திருமணம் ஆகி அந்தோனியார் புரத்தில் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், கலைச்செல்வி தனது வீட்டின் மாடியில் புதிதாக வீடு கட்டினாராம். அந்த வீட்டை ரூபிசன் குடியிருப்பதற்கு கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவரது தாயார் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டாராம். இதனால் தாய்க்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டார்களாம்.
இந்நிலையில் தனது நண்பரான தருவைகுளத்தைச் சேர்ந்த சகாய அந்தோணி மகன் சூசை அந்தோணி (39) என்பவரை உடன் அழைத்துச் சென்று ரூபிசன் மீண்டும் தனது தாயார் கலைச்செல்வியிடம் மாடி வீட்டை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது தாய் மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரூபிசன் தாயார் கலைச்செல்வியின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கலைச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், கலைச்செல்வியின் 2வது மகன் அந்தோணி டேரிசன் வீட்டுக்கு சென்று பார்த்த போது தாயார் இரத்த வெள்ளத்தில் பிணமாக கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது சம்பந்தமாக வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கலைச்செல்வி உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ரூபிசன் மற்றும் அவரது நண்பர் சூசை அந்தோணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.