பொங்கல் பண்டிகைக்கு திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தயாராகும் 1 லட்சம் பித்தளை பானைகள்... ஏழைகளின் தங்கத்துக்கு மீண்டும் மவுசு வருமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதற்கும் அனுப்புவதற்கு ஒரு லட்சம் பொங்கல் பானைகள் தயாராகிறது. காலச்சூழலில் குக்கர் பொங்கலுக்கு மாறிய நிலையில், பொதுமக்கள் மீண்டும் பித்தளை பாத்திரங்கள் பயன்படுத்த முன்வந்தால் பித்தளைக்கு வரவேற்பு கிடைப்பதுடன், பாத்திர தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். 

என்னதான் கேஸ் ஸ்டவ்வில் வேகவைத்து குக்கர் பொங்கல் சாப்பிட்டாலும், வீட்டு வாசலில் பித்தளை பானையிலும், மண்பானையிலும் பொங்கல் வைத்து பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயம் தான். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தமிழ் மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் பித்தளை பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பல தலைமுறைகளாக பாத்திர தொழில் செய்து வரும் பட்டறை உரிமையாளர்கள் சிலர் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இங்குள்ள 30க்கும் மேற்பட்ட பட்டறைகளில் பித்தளையில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பட்டறைக்கும் தினமும் 100 வீதம் தினசரி 3 ஆயிரம் பானைகள் என பொங்கல் பண்டிகை சீசனுக்கு இங்கிருந்து மட்டும் சுமாராக  ஒரு லட்சம் பொங்கல் பானைகள் தயாரித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. நாட்டுத்தவளை, களிபானை, கோதாவரி குண்டு, உருளி, வானாசட்டி போன்ற வகையிலான பொங்கல் பானைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் பானை என்கிற புது வடிவ பித்தளை பானைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சில்லறை விற்பனையில் பித்தளை ஒரு கிலோ 1300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

விலை அதிகம் என்பதால் பித்தளை பொருட்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது. 

இதுகுறித்து பித்தளை பாத்திர பட்டறை உரிமையாளர் திவாகர் கூறுகையில், ’பித்தளை பாத்திரங்கள் விலை அதிகம் உள்ள சூழலில் நகர்ப்புற மக்கள் பெரும்பாலும் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டார்கள். கிராமப்புறங்களில் தான் பித்தளை பாத்திரங்கள் பயன்பாடு இன்னும் இருக்கிறது. சில ஆண்டுகளாக பித்தளை பொங்கல் பானைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்து வருகிறது. அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க விரும்புவதில்லை. பித்தளை பாத்திரங்கள் ஏழைகளின் தங்கம் என்று சொல்வார்கள். மீண்டும் விற்றாலும் மதிப்பு குறையாத பொருள். 

இது தவிர செம்பு, பித்தளை பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவது நல்லது. பொதுமக்கள் பித்தளை பாத்திரங்களை அதிக அளவில் வாங்க முன்வந்தால் மீண்டும் பித்தளை பாத்திரங்களுக்கு மவுசு அதிகமாவதுடன், இதை நம்பி உள்ள திருப்பூரை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்கள் பித்தளை பாத்திரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டினால் தான் அடுத்த தலைமுறையினர் பாத்திர தொழிலுக்கு வருவார்கள். என்றார். குக்கர் பொங்கலில் இருந்து மீண்டும் தமிழக மக்கள் பித்தளை பாத்திரங்களுக்கும், மண்பாண்டங்களுக்கும் மாறினால் பாரம்பரியமும் திரும்பும், பித்தளை பட்டறை தொழிலாளர்களும் மகிழ்வார்கள்.

Previous Post Next Post