"தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் பணிகள் " - மாப்பிள்ளையூரணி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு.!
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி,இன்று (31.12.2023) நேரில் சென்று பார்வையிட்டு தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்கள் அதிகனமழை பெய்த காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களை மழைநீர் சூழ்ந்திருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக மாநகராட்சி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சித்துறை ஆகிய துறைகள் மூலம் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் மோட்டார்களைக் கொண்டு வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று (31.12.2023) தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட இருதயம்மாள்நகர், புதிய முனியசாமிபுரம், சகாயமாதாப்பட்டணம், ஆரோக்கியபுரம், வடக்குசோட்டையன்தோப்பு, ராஜபாளையம், தாளமுத்துநகர் மெயின்ரோடு, சவேரியார்புரம், டேவிஸ்புரம், மாப்பிள்ளையூரணி மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் தற்போது அகற்றப்பட்டு வரும் பணிகள் பார்வையிடப்பட்டது. மேலும், இங்கிருந்து வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் ராஜபாளையம் கடற்கரை வழியாக கடலில் கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கும் ஒரு மின்மோட்டாருடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாப்பிள்ளையூரணி பிரதான சாலையில் சேதமடைந்துள்ள சாலையில் தற்காலிகமாக நடைபாலம் அமைக்கப்பட்டு அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் கோமஸ்புரம் பகுதியிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு அது கடலில் கலப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள ரூ.6,000/- நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கக்கூடிய போல்பேட்டை மற்றும் எஸ்டேட் பேங்க் காலனி நியாய விலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் அமலா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் உலகநாதன், வட்டாட்சியர் (கு.பொ.வ) தூத்துக்குடி ஜான்சன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.