*பிழை செய்தது மழை அல்ல மனிதனே!* *இனியாவது நீர்நிலைகள், பாதைகளை அடைக்காதீர்! வாழ வைக்கும் சென்னையை அழ வைக்காதீர்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உருக்கமான வேண்டுகோள்* ! சென்னையில் மிக்ஜாம் புயலால் வரலாறு காணாத மழை தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த காரணத்தினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு சொல்லொண்ணா துயரத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.2015ல் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தைக் கண்ட சென்னை, அதைவிடவும் பெரும் வெள்ளத்தை தற்போது 2023ல் சந்தித்து இருக்கிறது. மிக்ஜாம் புயல் காற்றின் வேகம் குறைவாக இருந்ததால் உயிர் மற்றும் இதர சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வசதியை சென்னை மாநகரம் முழுவதும் செய்து முடித்த காரணத்தினால் மழை நின்ற பிறகு தற்பொழுது விரைந்து தண்ணீர் வடிவதை காண முடிகின்றது. அதேசமயம் புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீருக்குள் இருப்பதால் தரைத்தளத்தில் இருப்பவர்கள் பெரும் கஷ்டப்பட்டு வருவது நம்மை கலங்கடிக்க செய்கின்றது. எது எப்படியோ இயற்கையோடு விளையாடுவதை, இயற்கையான நீர் வழி தடங்களை அடைப்பதையோ இனி முற்றிலுமாக தடுக்கும் முயற்சியை மனிதர்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டும். மழை செய்த பிழை என்று கூறலாமா அல்லது மனிதன் செய்த பிழை என்று கூறலாமா என்றால் மனிதன் செய்த பிழை என்றே முடிவாகும். ஆகவே ஆறறிவு படைத்த நாம் பகுத்தறிவோடு எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படாத வகையில் நம்மை நாமே திருத்திக் கொண்டு நீர் நிலைகளை அடைப்பது, வீடுகளைக் கட்டுவது போன்ற செயல்களை சுய கட்டுப்பாட்டோடு நிறுத்திக் கொள்வதே சென்னையை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதாக அமையும். நீர்நிலைகள் நோக்கி மக்கள் இனியும் குடியேறுவது மறுபரிசீலனை செய்ய வேண்டியதாக அமைந்துவிட்டது. மேலும் வேலை தேடி தான் சென்னைக்கு செல்கின்றார்கள் என்பதால், இனி சில காலங்களுக்கு புதிய நிறுவனங்களை சென்னையில் அமைவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதன் வாயிலாக குடியிருப்புகள் மேலும் அதிகரிப்பதை தவிர்க்கும் சூழல் ஏற்படும். ஆகவே நீண்ட கால திட்டத்தினை சென்னையில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கோடி பேரின் நன்மை கருதி நிரந்தர தீர்வை நோக்கி அரசும் மக்களும் கைகோர்த்து பெருந்தன்மையோடு முடிவெடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் மீண்டும் இது போன்ற வெள்ள அபாய பிரச்சினைகளை எதிர் நோக்குவது தவிர்க்க இயலாததாக மாறிவிடும் என்பது நிதர்சனம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.