மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.12.2023) நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு,தொழில் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 415 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.2,960/- மதிப்பிலான காதொலிக்கருவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (பொ) (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) / திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம்) வீரபுத்திரன் , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.