*பெண்கள் தற்கொலையை தடுக்க மைக்ரோ பைனான்ஸ் நிதிநிறுவன கறார் வசூல் முறையை கட்டுப்படுத்திட மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* தமிழகம் முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் என்னும் வாராந்திர, மாதத் தவணை நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல தொடங்கி செயல்பட்டு வருகின்றன. இன்றைய பொருளாதார நிலையில் பணத் தேவை ஒவ்வொரு குடும்பத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் அவற்றை சமாளிப்பதற்காக அரசு சாரா மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நாடுகிறார்கள். இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் கிராமங்கள் தோரும் சென்று பெண்களுக்கு குழுவாகவும், தனி நபர்களுக்கும் கடன் கொடுத்து தவணையாக வசூல் செய்து வருகிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் பெருகி வலையென படர்ந்து செயல்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கும் பெண்களுக்கும் இந்நிதி நிறுவனங்களின் மூலம் பெரும் பணப்பலன்கள் சுலபமாக எளிய முறையில் கிடைத்தாலும் கூட உரிய நேரத்தில் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் பெரும் அவதிக்கும், அவமானத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்ற வகையில் அந்நிறுவன ஊழியர்கள் நடந்து வருகிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தவணை உரிய நேரத்தில் கட்டாததால் மயிலாடுதுறை நகரம் மாப்படுகை கிட்டப்பா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணும், அதேபோல கடந்த வாரம் மயிலாடுதுறை ஒன்றியம் ,காளி ஊராட்சிக்குட்பட்ட அபிராமிதோப்பு பகுதி சேர்ந்த மாலதி என்னும் 36 வயது பெண் ஒருவர் பெற்ற கடனை கொடுக்க முடியவில்லையே என்னும் அவமானம் தாங்கமுடியாமல் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இப்படிப்பட்ட நிறுவனங்களிடமிருந்து நிதியை பெறுகின்ற பெண்கள் தங்களால் எந்த அளவிற்கு சம்பாதித்து தவணை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உரிய தவணையை செலுத்துவதற்கான முயற்சியை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்னும் மனக்கட்டுப்பாடு பெண்களுக்கு அவசியம் தேவை. அருகில் உள்ளவர்கள் கடன் வாங்குகிறார்கள் என்பதனால் தாமும் தேவையில்லாமல் கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கின்ற சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல நிதி நிறுவன வசூல் ஊழியர்கள் கூட தங்கள் நிறுவனத்தின் மேலதிகாரிகளின் வற்புறுத்தல் மற்றும் நிர்பந்தத்தால் குறிப்பிட்ட நபரிடம் தவணை தொகையை எப்படியாவது பெற்றுக் கொண்டே வரவேண்டும் என்று கடிந்து கொள்வதால் தவிர்க்க இயலாமல் டார்கெட் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வசூல் வேட்டையில் தீவிரமாக ஈடுபடுவதாக பெரும்பாலான நிதி நிறுவன ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களின் மன வலிமையை புரிந்து கொள்ளாமல் டார்கெட் கொடுத்து வேலை வாங்கும் நிறுவனங்களின் சூழலாலேயே தற்கொலைகள் தூண்டப்படுகிறது.ஆகவே இச்சூழலை மாற்றி அமைக்க மயிலாடுதுறையில் உள்ள அனைத்து மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் முதன்மை நிர்வாகிகளை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூட்டம் நடத்தி அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி நெறிமுறைகளை தெரிவிக்க வேண்டும். மேலும் பெண்களும் தங்களை தாங்களே மாற்றிக்கொண்டு கடன் பெறுவதை குறைத்துக் கொண்டும் ஆசையை அகற்றியும், இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்கின்ற ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக நிதி நிறுவனங்களும் இருக்கும். நாமும் ஏமாற்றாமலும், கடன் கொடுத்தவரும் பயம் இல்லாமல் இருப்பதற்கு வழிவகை ஏற்படும். இனியும் இது போன்ற கடன் வாங்கியதால் ஏற்படும் தற்கொலைகள் நடக்காமல் இருப்பதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.