குஜராத் : போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக கோடிக்கணக்கில் மோசடி!
குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி ₹75 கோடி மோசடி செய்திருப்பது அம்பலம்!
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து, அதற்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றி விட்டுள்ளனர். அப்பாதையில் உள்ள வர்கசியா சுங்கச் சாவடி கட்டணத்தில் 50% மட்டுமே இங்கு வசூல் செய்யப்பட்டு வந்ததால், இதுகுறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்த ஆய்வில் உண்மை அம்பலமானது. தனியார் நிறுவன உரிமையாளர் தொழிற்சாலை உரிமையாளர் அமர்ஷி படேல் மற்றும் ஹர்விஜய் சிங் ஜாலா, யுவராஜ் சிங் ஜாலா, வனராஜ் சிங் ஜாலா மற்றும் தர்மேந்திர சிங் ஜாலா என நான்கு பேர் மீது போலீசார் புகார் பதிவு செய்தனர்.
மாநிலத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஒரு கற்பனையான அரசு அலுவலகத்தை உருவாக்கி ₹ 4 கோடிக்கும் அதிகமான பொது நிதியை மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.