கோவில்பட்டியில் துணிகரம் - ஜவுளிக்கடையில் புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி அம்பிகா (37). இவர், கோவில்பட்டி & பசுவந்தனை ரோடு பகுதியில் ஜவுளி மற்றும் செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பது போல் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென்று அம்பிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர், நகையை பறிக்க விடாமல் தடுத்து ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார். உடனே அக்கம்,பக்கத்தினர் திரண்டு வந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.தகவல் அறிந்து மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அம்பிகாவிடம் நகை பறிப்பில் ஈடுபட முயன்றவர் தூத்துக்குடி அண்ணாநகர் 12வது தெருவைச் சேர்ந்த முருகானந்தம் (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். ஜவுளிக்கடையில் புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.