கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக் கூடியதுமான சேவூரில் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
சிவப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. இத்திருநாளான நேற்று (செவ்வாய்கிழமை) மாங்கல்யநோன்பு, கடைப்பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக (புதன்கிழமை) காலை10 மணிக்கு சிவகாமியம்மாள் உடனமர் நடராஜ பெருமானுக்கு பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்புச் சக்கரை,வில்வப் பொடி, நெல்லி பொடி, அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, தேங்காய் துருவல், மாதுளை, பால், தயிர், ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, சப்போட்டா, அன்னாச்சிபழம், கொய்யா, எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர்,மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு மஹா அபிஷேகமும், பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்காரமும் மஹா தீபாராதனையுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றன.
அதை தொடர்ந்து பகல் 3 மணிக்கு கோவில் வெளிப்புற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி மூன்று முறை " பட்டி சுற்றுதல் " நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேவூரின் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வீதி உலாவில் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்திய இசை கோலாகலமாக நடைபெற்றது. வாத்திய இசை முழங்க மெய் சிலிர்க்க பட்டி சுற்றுதல் நடந்தது.
சேவூரில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்தனர். அப்போது கோபி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகே நடராஜருக்கும், அம்பாளுக்கும் ஊடல் ஏற்பட்டு கோபித்துக் கொண்டு அம்பாள் முகத்தை திருப்பிக் கொண்டு பாதியிலேயே நாராசா வீதி வழியாக தனியாக சென்று கோவிலுக்குள் புகுந்து கோவில் கதவை பூட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் அம்பாள் கோபித்துக் கொண்டு சென்று கதவை பூட்டிக்கொண்டார். பிறகு நடராஜப் பெருமான் மற்றொரு வழியாக கோவிலுக்கு வந்து கோவில் கதவை முடிக் கொண்ட சிவகாமியம்பாளை சாந்தப்படுத்தினார்.
இதில் 63 நாயன்மார்களில் முதன்மையானவரும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பதிகத்தை பாடி சாந்தப்படுத்தினார். இதை தொடர்ந்து கோவில் கதவு திறக்கப்பட்டது. பின்னர் சிவகாமியம்பாள் கோபம் தணிந்து வெளியே வந்தார்ம் நடராஜருடன் சிவகாமியம்மாள் ஒன்றினைத்து கோவிலுக்குள் சென்று மஹா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு சாந்து வழங்கப்பட்டது.
திருவிழாவையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.இரவு 10 மணிக்கு ராஜவீதி கடைவீதி பந்தலில் நாதஸ்வரம் மேளக்கச்சேரி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.