தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி தூத்துக்குடிக்கு நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு -பேரிடர் மீட்புப் படையின் ஒரு பிரிவு திருவைகுண்டம் அனுப்பி வைப்பு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதையொட்டி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர் பா.ஜோதி நிர்மலாசாமி தூத்துக்குடிக்கு வந்து நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு பிரிவு திருவைகுண்டம் வட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதி கன மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதை தொடர்ந்து அங்கு வசிக்கும் 640 நபர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லெட்சுமிபதி தகவல் தெரிவித்துள்ளார்.
17ம் தேதி அதிகாலை 6.00 மணி முதல் 18 ம் தேதி 2.30 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில், தூத்துக்குடி 258 mm, ஸ்ரீவைகுண்டம் 607.50 mm, திருச்செந்தூர் 669 mm, காயல்பட்டினம் 845 mm, குலசேகரபட்டினம் 316mm, சாத்தான் குளம் 447.60 , கோவில்பட்டி 375 MM ஆக பதிவாகியுள்ளது.