தேமுதிக என்ற அரசியல் கட்சியை நிறுவி 21ம் நூற்றாண்டில் மூன்றாவது பெரிய திராவிட கட்சியாக வளர்த்தெடுத்த விஜயகாந்த் இன்று காலமானார்.
அவர் கடந்த வாரத்தில் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை தேமுதிக சார்பில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும், மூச்சு விட திணறல் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சென்னை மியாட் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சாலிகிராமம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேப்டன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் தனது தந்தையின் ரைஸ் மில் தொழிலில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை வகித்தவர். சினிமா உலகில் ஜாம்பவானாக வலம் வந்த விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் பெரும் கடன் சுமையை குறைத்ததன் மூலம் நடிகர் சங்கத்தின் முடிசூடிய மன்னனாகவே வலம் வந்தார்.
விஜயகாந்த் 1952-ல் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் என்ற ஊரில் பிறந்தவர். இளமையிலேயே மதுரைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. சினிமா மோகத்தில் இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் படிக்கவில்லை.
1978 முதல் சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். இயக்குநர் காஜா இதை விஜயகாந்த் என்று மாற்றினார். 1990 -ல் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவரது 100 வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படம் தான் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற அடைமொழியை பெற்றுத்தந்தது. அரசியல் களத்திலும் பின்னாளில் கேப்டன் என்றே அழைக்கப்பட்டார்.
கோபக்காரராக அறியப்பட்ட விஜயகாந்த் அரசியல் மேடைகளில் சாதாரண பேச்சு வழக்கில் பேசி மக்களை ஈர்த்தார்.. கருப்பு உருவத்திலும், சிவந்த கண்களிலும் ரியல் மிரட்டல் நாயகனாகவே வலம் வந்தவர் இவர்.
இவரது ‘’தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க’’ என்ற டயலாக் மிக பிரபலமானது. அரசியல்வாதிகளின் எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்த போதும், மக்கள் ஆதரவையும் சம்பாதித்திருந்தார்.
ரசிகர் மன்றத்தினர் பல இடங்களில் போட்டியிட்டனர். சிலவற்றில் வெற்றியும் பெற்றனர். இது தான் விஜயகாந்துக்கு பின்னாளில் அரசியல் கட்சி தொடங்க அடித்தளமாக அமைந்தது.
2005- ல் தேமுதிக கட்சியை தொடங்கினார். 2006ல் விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். பாமக-வால் கடுமையான போட்டியையும், எதிர்ப்பையும் சந்தித்தார். தேர்தலில் வெற்றி பெற்றார்.
2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டேப்பேரவை தேர்தலை சந்தித்தார். இவர் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக வெற்றியும் பெற்றார். 2011 முதல் 2016 வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார்.
2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதில் தேமுதிக பலத்த தோல்வி அடைந்தது. பின்னிட்டு சில ஆண்டுகளில் உடல் நலம் குன்றியதால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.