நாடாளுமன்றத்தில் கலர்பாம் வீச்சு நால்வர் கைது! பாதுகாப்பில் கோட்டை! விட்டது எப்படி ?
மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.
எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றதை பார்க்க முடிந்தது. மக்களவை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்தவர்கள், மற்றும் வெளியே இருந்தவர்கள் இரண்டு பேர் என இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், "பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து முதலில் ஒருவர் தாவினார். அவர் தவறி விழுந்துவிட்டதாகதான் முதலில் நினைத்தோம்.
ஆனால், அவர் எழுந்து வேகமாக நாற்காலிகளுக்கு நடுவில் ஏறிக் குதித்து ஓடினார். மற்றொரு நபர் அவையில் குதித்த பிறகுதான், இரண்டு பேர் குதித்து உள்ளே வந்திருக்கின்றனர் என்பது புரிந்தது.
அவர்களைப் பிடிப்பதற்கு முன்பாக ஷூவில் இருந்து கேஸை எடுத்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அவையில் காவலர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் அச்சத்தில்தான் இருந்தனர். 15 நிமிடங்களுக்குப்பிறகு காவலர்கள் உள்ளே வந்தனர். பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முழுக் காரணம்," என்றார்.
உள்ளே குதித்த நபர்கள் கோஷம் எழுப்பினர் என்றும் உள்ளே நடந்த களேபரத்தில் அவை தமக்குச் சரியாகக் கேட்கவில்லை என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
உள்ளே நுழைந்த “இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பொருட்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
மேலும், “மக்களவை இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தேவையான தகவல், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்ட விசாரணையில், சாதாரண புகைதான் என்பது தெரிய வந்துள்ளது. இது கவலைக்குரிய விஷயமில்லை,” என்றார்.
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான பெண்களில் ஒருவர் பெயர் நீலம் (42 வயது) மற்றும் இன்னொருவர் பெயர் அமோல் ஷிண்டே (25 வயது) எனத் தெரியவந்துள்ளது. ‘சர்வதிகாரம் கூடாது’ என மக்களவைக்குள் நுழைந்த இருவரும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் பிரதமரின் நெருங்கிய உதவியாளரான பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் விசிட்டர் பாஸில் வந்துள்ளது விசாரனையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.