திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில் இன்று இரண்டு நாய்கள் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்டு இறந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சேவூர் அடுத்த போத்தம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக இரண்டு சிறுத்தைகள் உலா வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் வந்து ஆய்வு செய்ததில் குறைந்த அளவு காலடித்தடமே கிடைத்தது. இதனால் அது சிறுத்தையா என உறுதி செய்ய முடியவில்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கிருந்த பெண் தான் நிச்சயமாக இரண்டு சிறுத்தைகள் நாய்களை துரத்தி செல்வதை பார்த்ததாக உறுதியாக கூறி அச்சம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சேவூர் பகுதியில் இன்று இரண்டு நாய்கள் கடித்து குதறப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேவூர் கிளா குளம் பகுதியில் ஒரு நாய் தலைப்பகுதியில் பலமாக கடிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளது. இதை இன்று காலை வனத்துறையினர் பார்த்து சென்று உள்ளனர். இன்று மதியம் சேவூர் ரெயின்போ காலனி பகுதியில் இன்னொரு நாய் தலையில் கடித்து குதறப்பட்டு கிடந்துள்ளது.
இதில் நாயின் உடலை சேவூர் அரசு மருத்துவமனையில் வனத்துறையினர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அது மர்ம விலங்கு கடித்து குதறியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம விலங்கு, என்ன விலங்கு என்று வனத்துறையினர் உறுதி செய்யவில்லை.
கடந்த ஒரு வாரம் முன்பாக சேவூர் போத்தம்பாளையத்தில் இரு சிறுத்தைகள் நாயை துரத்துவதை பார்த்ததாக பெண் ஒருவர் கூறிய நிலையில், தற்போது இரண்டு நாய்கள் மர்மவிலங்கால் கடித்து குதறப்பட்டு இறந்திருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.