திருப்பூர் அருகே சேவூர் போத்தம்பாளையம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதாக பெண் ஒருவர் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அப்பகுதியில் வித்தியாசமான காலடித்தடம் இருப்பதால் அது சிறுத்தையின் காலடித்தடமா? அல்லது செந்நாய்களின் காலடித்ததடமா என அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேவூர் அருகே போத்தம்பாளையம் என்கிற பகுதி உள்ளது. போத்தம்பாளையம் பகுதியில் இருந்து புலிப்பார் செல்கின்ற சாலையில் இன்று மதியம் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இரண்டு சிறுத்தைகளை அவர் கண்டிருக்கிறார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தார்.
வனத்துறையினர் வந்து அந்த பகுதியை ஆய்வு செய்தார்கள் . சிறுத்தைகள் ஏதும் அந்த பகுதியில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார்கள். சிறுத்தை ஏதும் தென்படவில்லை.
ஆனால் அந்த பகுதியில் வித்தியாசமாக இரண்டு காலடி தடங்கள் இருந்திருக்கிறது. இதை எடுத்து அது சிறுத்தையின் காலடித்தடமா அல்லது செந்நாய்களின் காலடி தடமா என அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 2021 ஆண்டு சேவூர் பாப்பான்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று ஒரு வாரம் போக்கு காட்டியது. அந்த சிறுத்தை திருப்பூர் மாநகரக்குள்ளும் புகுந்து திருமுருகன் பூண்டி பகுதியில் பனியன் கம்பெனி காவலாளி ஒருவரை தாக்கவும் செய்தது. அதை பெருமுயற்சி எடுத்து வனத்துறையினர் பிடித்து சென்றார்கள்
. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தைகள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்து இருப்பது சேவூர் போத்தம்பாளையம் மற்றும் திருப்பூர் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது