தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி ரூ.6ஆயிரம் வழங்கும் பணி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!


 தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி ரூ.6ஆயிரம் வழங்கும் பணி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால்  பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி 6ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார். 


தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசியும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரணத் தொகையாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.


இதைத்தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாநகராட்சி டூ.வி.புரம் 5ஆவது தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில், மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி வட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசியை வழங்கி தொடங்கி வைத்தார். 


பின்னர் கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிகனமழை பாதிப்பால் பல இடங்களில் மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்திருக்க கூடிய ஒரு சூழல், வீடுகளில் இருக்கக்கூடிய துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்களை இழந்திருக்கிறார்கள், அதுமட்டுமல்லாமல் ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளையும் இழந்திருக்கிறார்கள். மேலும் அவர்களது விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள், சிறு தொழில்கள் செய்து கொண்டிருக்க கூடியவர்களும் பாதிப்படைந்துள்ளார்கள். 


குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செய்து கொண்டிருக்கிறவர்களுடைய தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவிலே கன மழையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, சாலைகள் எல்லாம் அரித்து செல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய பாலங்கள் எல்லாம் உடைந்து விடக்கூடிய அளவிற்கு இந்த மழை பாதிப்பு நமது மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. 


முதற்கட்டமாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர், அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட 3,23,108 குடும்ப அட்டைதாரர்களுக்கு 508 நியாயவிலைக்கடைகள் மூலமாக தலா ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் தலா 5 கிலோ அரிசியும், அதுபோல வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட 2,14,717 குடும்ப அட்டை தாரர்களுக்கு 449 நியாயவிலைக்கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாகவும் வழங்க உத்தரவிட்டுள்ளார். 


அதன்படி இன்றைய தினம் மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை மற்றும் தலா 5 கிலோ அரிசியும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் நியாயவிலை கடைகள் மூலமாக நடைபெற்றுவருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் உள்ள 957 நியாயவிலைக் கடைகள் மூலமாக 5,37,825 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.215 கோடி செலவில் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடை மூலமாக வழங்கப்பட்டுவரும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பதற்காகவும், அந்த பணிகள் சீராக நடைபெற்றுவருவதை உறுதிசெய்யும் விதமாகவும் இன்று மீண்டும் அமைச்சர் பெருமக்களை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.



இந்நிகழ்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் , மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post