ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்துசெய்தது சட்டப்படி செல்லும்,ஜம்மு காஷ்மீரில், 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!


 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்துசெய்தது சட்டப்படி செல்லும்,ஜம்மு காஷ்மீரில், 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!


2019-ல் ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ, பா.ஜ.க அரசு நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ன்கீழ் சிறப்பு அந்தஸ்து இருந்தது. இந்தச் சிறப்பு அந்தஸ்தின்படி, தேசியப் பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில முக்கிய விவகாரங்களைத் தவிர, மற்ற அனைத்து விவகாரங்களிலும் கொண்டுவரும் முடிவுகள், சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் அவ்வளவு எளிதாக மத்திய அரசால் கொண்டுவந்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை அவற்றை அனுமதித்தால் மட்டுமே அவற்றை அங்கு செயல்படுத்த முடியும்.


பெரும்பாலான விஷயங்களில் மத்திய அரசின் அதிகாரத்தைவிட, மாநில அரசின் அதிகாரம்தான் முதன்மையாக இருக்கும். குறிப்பாக, ஜம்மு காஷ்மீருக்கென்று தனிக்கொடி, அரசியல் சாசனம், இரட்டைக் குடியுரிமை, வேறு மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது உட்பட பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளை பிரிவு 370 வழங்கியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தாது.


இத்தகைய சூழலில், 2019-ல் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., தேசியப் பாதுகாப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவற்றைக் காரணம் காட்டி 2019, ஆகஸ்ட் 5-ம் தேதியன்று பிரிவு 370-ஐ ரத்துசெய்தது. அதோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, நேரடியாக மத்திய அரசின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவந்தது 


மேலும், `யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததுகூடத் தற்காலிக நடவடிக்கைதான். விரைவில் மாநிலமாக மீண்டும் மாற்றப்படும்' என்று பா.ஜ.க அரசு கூறியது. இவ்வாறு கூறப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்றுவரை ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படவில்லை. பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட சமயத்தில், `இன்றைக்குத் தன் அதிகாரத்தால் ஒரு மாநிலத்தை இரண்டாக உடைத்து தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த மத்திய பா.ஜ.க அரசு, நாளை எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றித் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும்' எனப் பல்வேறு மாநிலங்கள் எதிர்த்தன. நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்தன. 


இதன் காரணமாக, பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநிலக் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவாய், சஞ்சிவ் கன்னா, சூர்யா காந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. விசாரணையில், `ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கப் பரிந்துரைத்தது யார்... அரசியலமைப்பின் பிரிவு 370 தற்காலிகமானது என்று கூறப்படும் வேளையில், எவ்வாறு அது நிரந்தமாகும்?’ என மத்திய அரசுக்கும், மனுதாரர்கள் தரப்புக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.


அதற்கு, `மாநிலங்களை மறுசீரமைக்க மத்திய அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு, பிரிவு 370 தடையாக இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் ஜம்மு காஷ்மீரின் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தீவிரவாதச் செயல்கள் குறைந்திருக்கின்றன' என மத்திய அரசு வாதிட்டது. மறுபக்கம், `பிரிவு 370-ஐ நீக்க அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை முக்கியம். ஆனால், ஜம்மு காஷ்மீரில் 1956-ல் இது கலைக்கப்பட்டுவிட்டதால், எவ்வாறு பிரிவு 370-ஐ நீக்க முடியும்... மத்திய அரசின் இந்தச் செயல், சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுகிறது. இது, மக்கள் விருப்பத்துக்கு எதிரான அரசியல் நடவடிக்கை' என மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


இறுதி வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை ஒத்திவைப்பதாக செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் மூன்றுவிதமான தீர்ப்புகளை இன்று வழங்கியிருக்கிறது. அதில், தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். இவர்களிடமிருந்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக, இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக நீதிபதி சஞ்சிவ் கன்னா ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.


பின்னர், இறுதித் தீர்ப்பைத் தொகுத்து வழங்கிய தலைமை நீதிபதி சந்திரசூட், "ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு, இறையாண்மை குறித்த கூற்றுகளைக்கொண்டிருக்கவில்லை. பிரிவு 370 என்பது, சமச்சீரற்ற கூட்டாட்சியின் அம்சமே தவிர இறையாண்மை அல்ல. மனுதாரர்கள் யாரும், குடியரசுத் தலைவரின் பிரகடனத்தைப் பற்றிக் கேள்வியெழுப்பவில்லை.


மேலும், அத்தகைய பிரகடனத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது, நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்பட்டது. அதோடு, பிரிவு 356 (1)-ன்படி மாநில சட்டமன்றத்தின் சார்பாக, அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம் என்பது சட்டத்தை உருவாக்கும் அதிகாரங்களுக்குத் தடைசெய்யவில்லை.


எனவே, பிரிவு 370 தற்காலிகமானதுதான். ஜம்மு காஷ்மீரின் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, பிரிவு 370(3)-ன் அதிகாரம் நிறுத்தப்படவில்லை. பிரிவு 370 (1)(d)-ன்கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி 370-வது பிரிவைத் திருத்த முடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்துசெய்தது சட்டப்படி செல்லும். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியதும் செல்லும். ஜம்மு காஷ்மீரில், 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது கூடிய விரைவில் நடைபெற வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

Previous Post Next Post