தூத்துக்குடி மாவட்டம் :2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.19,048 கோடி கடன் இலக்கு - வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் கடன் திட்ட அறிக்கை வெளியிட்டு ஆட்சியர் தகவல்.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று(28.12.2023) மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையின் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்:-
மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 295 வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கான 2024-2025ஆம் நிதியாண்டிற்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட இலக்கு நிர்ணயித்து இன்று வெளியிடப்பட்டது.
இந்த கடன் திட்டங்களில் இலக்கானது அனைத்து வங்கிகளின் கடந்த நிதி ஆண்டின் நிதி நிலைமையின் அடிப்படையிலும், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட இலக்கினையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.19,048 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் இலக்கானது கடந்த நிதியாண்டின் இலக்கைவிட ரூ.5065 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் சார்ந்த கடன் உதவியாக பயிர்க்கடனாக ரூ.7419 கோடியும், வேளாண்மை நீண்டகால கடன் உதவியாக ரூ.2472 கோடியும், வேளாண் உட்கட்டமைப்பு கடனாக ரூ.199 கோடியும், இதர விவசாயக் கடனாக ரூ.952 கோடியும் ஆக மொத்தம் வேளாண்மை சார்ந்த கடனாக ரூ.11043 கோடியும், தொழில் வளர்ச்சிக்காக ரூ.5046 கோடியும், ஏற்றுமதி, கல்வி, வீடு உள்ளிட்ட கடனுக்காக ரூ.2029 கோடியும், சமூக கட்டமைப்பு கடனாக ரூ.46 கோடியும், மகளிர் கடனுக்காக ரூ.831 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, சாத்தான்குளம் மற்றும் கருங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்முனைவுகளை வுகளை ஏற்படுத்தும் பொருட்டு இத்திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோருக்கு 30 சதவிகிதம் இணை மானிய நிதி திட்டத்தின்கீழ் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணை மானிய நிதி திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு 30 சதவிகிதம் மானியத்தில் தொழில்தொடங்க தனிநபர் கடனுதவியாக ரூ.10,27,500/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வ.இ) வீரபுத்திரன், துணை பொது மேலாளர் (ரிசர்வ் வங்கி) முத்துசெல்வம் , நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் , பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா, துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) முருகப்பன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.