காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கு - ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உட்பட 15 காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவு.!
நெல்லை மாவட்டம் அமபாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உட்பட காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் என்பவரை விசாரணை அதிகாரியாக நியமித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின் ஆட்சியர் பரிந்துரையின் படி தமிழக அரசு உயர் நிலை அதிகாரி தலைமையில் விசாரணையை தொடங்கியது.
அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் 80 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றது. அதன்படி பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே வழக்கு விசாரணையை சிபிசிஐடி இடம் தமிழக அரசு ஒப்படைத்தது.
சிபிசிஐடி ஏடிஎஸ்பி செல்வம் தலைமையிலான போலீசார் பல்வீர் சிங் உள்ளிட்ட 15 நபர்கள் மீது வெவ்வேறு புகார்களில் நான்கு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணை நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரிவேணி முன்பு இன்று வந்தது. இதில் சிபிசிஐடி சார்பில் ஏ டி எஸ் பி செல்வம், ஆய்வாளர் உலகுராணி உள்ளிட்டோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 நபர்களும் ஆஜராகினர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினர் என்பதால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாராஜன் வலியுறுத்தினார். ஆனால் வழக்கு விசாரணையை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார்.
உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்ற உள்ள நிலையில் பல்வீர் சிங் உள்ளிட்ட 15 நபர்களும் பிணை உறுதி அளிக்க தயாராகி வந்தனர். அவர்கள் பிணை மனு தாக்கல் செய்து உடனே அவர்களை பிணையில் விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த பிணை மனு குறித்த விசாரணையில் முன்னாள் ஏ.எஸ்.பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உட்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி நெல்லை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1 நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவு பிறப்பித்தார்.