சேவைக் குறைபாடு : தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,10,000 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,10,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி பொன் சுப்பையா நகர் பகுதியைச் சார்ந்த சரவணகுமார் என்பவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இரண்டாவது ஆண்டாக காப்பீட்டை புதுப்பித்துள்ளார். சில மாதங்களில் மனுதாரருக்கு உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. உடனே தூத்துக்குடியிலுள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு பரிசோதனை செய்ததில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனடிப்படையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை காப்பீட்டு நிறுவனப் பட்டியலில் இல்லாத காரணத்தினால் காப்பீட்டு தொகையை மருத்துவமனைக்கு நேரிடையாக செலுத்த முடியாது. பணத்தை செலுத்தி விட்டு பின்னர் செலவு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் உரிய மருத்துவ ஆவணங்களுடன் செலவுத் தொகையை தரக் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் பாலிசி எடுத்து 3 ஆண்டு காலம் முடிந்திருந்தால் தான் காப்பீட்டு தொகையை பெற முடியும் எனக் கூறி தட்டி கழித்து விட்டது. மனுதாரர் பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மருத்துவ செலவுத் தொகை ரூபாய் 50,000, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 50,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 1,10,000 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.