பெண்களை குறிவைத்து துரத்தி துரத்தி படம் எடுத்த செய்தியாளர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.!
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..
20.11.2023 அன்று 0015 மணியளவில், நந்தனத்தில் (J1 சைதாப்பேட்டை கா.நி.) அமைந்துள்ள Big Bull Lounge என்ற தனியார் மதுக்கூடத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்த பின்னர் சென்ற ஐந்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மேற்படி மதுக்கூடத்தில் பிரச்சனை செய்துள்ளனர். அச்சமயம், பெண்கள் உட்பட சில வாடிக்கையாளர்கள் அம்மதுக்கூடத்தில் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டி ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருந்தனர். மேற்படி பிரச்சனை குறித்து தகவல் தெரிந்ததையடுத்து, சுதர்சன் (நிருபர், நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சி) மற்றும் சிலருடன் அங்கு வந்துள்ளார். அவர்கள் அப்பிரச்சனையை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, சில அடையாளம் தெரியாத நபர்கள் மதுக்கூடத்திலிருந்து வெளியே வந்த பெண்கள் குறித்து தவறான, இழிவான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை கூறியுள்ளனர். அப்பிரச்சனையை பல்வேறு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன.
இது குறித்து, 23.11.2023 அன்று, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மேற்படி சுதர்சன் மற்றும் சிலர் மீது J1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டப் பிரிவு 143, 341, 294(b), 354 (A), 509 இ த ச மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.