திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளைத்தை பயன்படுத்தி சுத்திகரிக்காத சாயக்கழிவு நீரை ஆற்றில் திறந்து விடுவதால் நுரை பொங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நொய்யல் ஆறு கோவைக்கு மேற்கே உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 165 கி.மீ., தூரம் பயணித்து காவிரியில் கலக்கக் கூடிய ஆறு ஆகும். இந்த ஆறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாக்கடை நீர் கழிவுகளாலும், திருப்பூரின் சாயக்கழிவு நீராலும் மாசடைந்து போனது. பல்வேறு நீதிமன்ற முயற்சிகளுக்கு ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புது வெள்ளம் பெருகி நொய்யல் ஆற்றில் வழிந்தோடுகிறது. திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை பகுதியில் இந்த மழை வெள்ளமானது ஆர்ப்பரித்து பொங்குகிறது. நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கி வருகிறது. கோவிலுக்கு செல்லக் கூடிய சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படி பாயும் வெள்ளத்தில் ஆள் உயரத்துக்கு நுரை சூழ்ந்து வெண்மையாக பஞ்சு பொதி போல நுரைத்து செல்கிறது.
அந்த பகுதி முழுக்க நுரையால் சூழ்ந்து உள்ள நிலையில், ஆற்றங்கரையில் உள்ள சாய, சலவை பட்டறைகள் சுத்திகரிக்காத சாய நீரை ஆற்று வெள்ளத்தில் கலப்பதால் தான் இது போல பெருமளவு நுரை உருவாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக மங்கலம், வெள்ளஞ்செட்டிபாளையம், ஆண்டிபாளையம், பாரப்பாளையம் மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக குழாய்களை அமைத்து ஆற்றில் கழிவு நீரை கலப்பதாகவும், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் துளிகூட சுத்திகரிக்காத சாயக்கழிவு நீரை அப்படியே திறந்து விடுவதால் தான் ஆள் உயரத்துக்கு நுரை ஏற்படுவதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேரடியாக சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக ஆற்றுக்கு தண்ணீர் செல்வதற்கு அமைத்துள்ள குழாய்களை அகற்ற வேண்டும் எனவும், தொடர்ச்சியாக சாயக்கழிவு நீர் கலப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.