*குத்தாலம் தாலுகாவில் நத்தம் நிலங்களை இணையத்தில் ஏற்றுவதில் உள்ள குறைபாடுகளை நீக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை !* மயிலாடுதுறை மாவட்டத்தில் நத்தம் பட்டா மாறுதல் இணையத்தில் பதிவேற்றம் செய்து விரைவில் தமிழ் நாட்டில் முன்மாதிரி மாவட்டமாக மயிலாடுதுறை திகழப்போகிறது என்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இருந்த பொழுதிலும் நத்தம் நிலங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் நிறைய குளறுபடிகளுடன் ஆன்லைன் பதிவு செய்வது வேதனையை தருகிறது.நிறைய உட்பிரிவுகள் இடம்பெறவில்லை.பட்டா உரிமையாளர்கள் பெயர்களில் குளறுபடிகள் உள்ளது. தமிழ்நாடு அரசு 2023மே4ம் தேதி வெளியிட்ட எண்; 221என்னும் அரசாணையின்படி இந்த நல்ல திட்டங்களை செவ்வனே செய்தால் மட்டுமே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குத்தாலம் தாலுகாவில் 56 கிராமங்கள் மற்றும் குத்தாலம் பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 32,952 வீடுகளில் வசிக்கும், மக்கள் தொகை 1,31,948 ஆகும். சுமார் 75.02 சதவிகிதம் பேர் படிப்பறிவு பெற்ற இக்குத்தாலம் தாலுக்காவில், நத்தம் காலி மனைகளை குறைகளோடு இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக தகவல்கள் வருகிறது. ஆதலால் நத்தம் காலிமனைகள் பட்டா கொடுக்கும் அதிகாரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது கோட்டாட்சியர் தான் களஆய்வுகள் மேற்கொண்டு கொடுக்க வேண்டும் என்னும் நிலையையே தொடர வேண்டும். எந்தவித விசாரணை இல்லாமல் முறைகேடாக ஆன்லைன் பதிவு செய்வது சட்ட விரோதம் ஆகும். சில இடங்களில் உட்பிரிவு செய்த புல எண்ணும்.உட்பிரிவு செய்வதற்கு முன்பு உள்ள புல எண்ணும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட குறைபாடுகளால் எதிர்காலத்தில் ஆவணங்களை திருத்துவதில் பயனாளிகளுக்கு பெரும் அவதியும் அலைச்சலும் அல்லலும் பெரும் பொருளாதார இழப்பும் காலவிரயமும் காத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உடனடியாக குறைகளை நீக்கிட அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை இத்துறை சார்ந்த எந்தவித அனுபவமும் இல்லாத தற்காலிக கணணிப் பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இப்படிப்பட்ட பிரச்சனைகள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தேவை ஏற்படின் ஓய்வு பெற்ற வருவாய்துறை மற்றும் நிலஅளவை ஊழியர்களையும் பயன்படுத்தி ஆவணபதிவு திருத்தம் செய்ய வேண்டும். முழுமையான குறைகளற்ற ஆவணப்படுத்துதல் பணிகளை உறுதி செய்ய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் நலன் கருதி சமூக ஆர்வலர், அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.