திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் - அரோகரா’ முழக்கத்துடன் மக்கள் வெள்ளம்.!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், அலைவீசும் கடலருகே அமைந்துள்ள தனிசிறப்பும் வாய்ந்தது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி தவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சஷ்டி திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை மாலை நடந்தது. இதையொட்டி அதிகாலையே நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதியம் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சர்வ அலங்காரத்துடன் ஆயத்தமானார். முன்னதாக, மதியம் சிவன் கோயிலிருந்து சூரபத்மன் தனது படை பரிவாரங்களோடு ரதவீதிகள் சுற்றி கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து கோயில் கடற்கரைக்கு வந்தார். பின்னர், சூரசம்சம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. லட்சகணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் ஜெயந்திநாதருடன் கஜமுகசூரன் சுவாமி போர் புரிந்தார். மூன்று முறை சுவாமியை வலம் வந்த சூரன், பின்னர் எதிர்திசையில் நின்றார். சரியாக மாலை 4.41 மணிக்கு கன்மையை அழித்து கஜமுக சூரனை முருகப்பெருமான் தனது வெற்றிவேலால் வீழத்தினார். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் விண்ணை பிளக்கும் வகையில் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து சிங்கமுகமாக மாறி சூரன், முருகபெருமானிடம் போர் புரிந்தார். மாயை அழித்து செந்திலாண்டவர் தனது வெற்றி வேலால் சிங்கமுக சூரனை சரியாக மாலை 4.58 மணிக்கு வீழ்த்தினார். பின் சூரன் தனது சுயரூபம் கொண்டு சூரபத்மனாக மாறி முருகப்பெருமானிடம் போரிட்டார். ஆணவத்தை அழித்து அவதார மகிமைய உலகிற்கும் உணர்த்தும் வகையில் செந்திலாண்டவர் தனது வேலால் சூரபத்மனை சரியமாக மாலை 5.11 மணிக்கு வீழ்த்தினார்.
பின் சேவலாகவும், மாமரமாகவும் மாறி சூரபத்மான் முருகப்பெருமானிடம் போரிட்டார். கருணைக் கடவுளான செந்திலாண்டவர் சூரனை சேவலாகவும், மாமரத்தையும் தன்னுள் ஆட்கொண்டார். சூரனின் முதல் தலையை கொய்ததும் விரதமிருந்த லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கடலிலும், நாழி கிணற்றிலும் புனித நீராடி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.
சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்பு சுவாமி ஜெயந்திநாதர் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள, 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். இரவு சுவாமிக்கு சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி முன்பு சுவாமி வைக்கப்பட்டு அவரது பிம்பத்திற்கு அபிஷேகம் நடக்க இருக்கிறது. சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சஷ்டி திருவிழாவின் 7-ம் நாளான நாளை அதிகாலை தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பட்டு முருகா மடம் சென்று சேர்கிறார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் முருகமடத்தில் உள்ள தெய்வானைக்கு அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். பின்னர் தெப்பக்குளம் தெரு சந்திப்பில் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடக்க இருக்கிறது.