தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்ட கலெக்டர், ஷஜீவனா தண்ணீரை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட சோத்துப்பாறை அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காகவும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, இன்று (01.11.2023) தண்ணீரை திறந்து வைத்தார்கள்.
தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம், வராகநதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காகவும் மற்றும் பெரியகுளம் நகராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், இன்றைய தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1825 ஏக்கர் பழைய நன்செய் பாசன நிலங்களும், 1040 ஏக்கர் புதிய புன்செய் பாசன நிலங்களும், என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும், பெரியகுளம் நகராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காவும் 01.11.2023 முதல் 15.03.2024 வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதன்படி, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, 01.11.2023 முதல் 15.12.2023 வரை 45 நாட்களுக்கு வினாடிக்கு 30 கனஅடி வீதமும், 16.12.2023 முதல் 15.01.2024 வரை 31 நாட்களுக்கு வினாடிக்கு 27 கனஅடி வீதமும், 16.01.2024 முதல் 15.03.2024 வரை 60 நாட்களுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதமும் ஆக மொத்தம் 136 நாட்களுக்கு 318.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பைப் பொருத்து இதேப்போல் தண்ணீர் திறந்து விடப்படும். எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும்.
இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநில உபகோட்டம்) திரு.சௌந்தரம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தங்கவேல், தென்கரை பேரூராட்சித் தலைவர் நாகராஜ், பெரியகுளம் வட்டாட்சியர் திரு.அர்ஜுனன், உதவி பொறியாளர் திரு.ராஜசேகரன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.