வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் : தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்; மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: இந்திய வானிலை மையத்திலிருந்து வரப்பெறும் கனமழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் கீழ்நிலை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி துறையினர் நீர்நிலைகளை தூர்வாரி மழைநீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்களை சரி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களை வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும், சுகாதாரத்துறை மூலம் மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், ஜெனரேட்டர்கள், பம்பு செட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அவசரகால உபகரணங்களை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும், துஊடீ இயந்திரங்களை வைத்துள்ளவர்களின் தொலைபேசி எண்களை அனைவரும் தயாராக பெற்று வைத்திருக்க வேண்டும்.
பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார கோட்டத்தினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் அனைத்து நீர்நிலைகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் ஆறு, கால்வாய் முதலிய நீரோட்டங்களின் கரைகள் பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மணல் மூடைகளை போதிய அளவில் இருப்பில் வைக்க வேண்டும். மணல் மூடைகளை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவான இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் மணல் மூடைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
கால்வாய்களில் நீர் வரும் வழி மற்றும் வெளியேறும் வழி ஆகியவற்றில் அடைப்புகள் இல்லாதவாறு தூர்வார வேண்டும். கால்வாய்களில் இரு கரைகளிலும் நூறு மீட்டர் தொலைவிற்கு தூர்வார வேண்டும். மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 97 புகலிட மையங்களில் குடிநீர் வசதி, கழிவரை வசதி உள்ளதா என்று வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கோட்ட அலுவலர்கள், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோர் தங்களின் சார்நிலை அலுவலர்களுக்கான கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். கோட்ட அலுவலர்கள் முதல்நிலை பொறுப்பாளர்களின் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
சுகாதார துறையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாம்பு பிடி வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.