என்ன தான் தொழில் திறமை இருந்தாலும், நன்றாக வாய் பேசும் திறமை உடையவர்கள் சமுதாயத்தில் எளிதில் வெற்றி அடைகிறார்கள். தொழில் திறமையோடு வண்டி வண்டியாக பேசக்கூடிய வாய் திறமையும் இருந்ததால் தான் டி.டி.எப்., வாசன் என்கிற இளைஞர் இன்று தமிழகம் முழுக்க பெரும் பிரபலமாகி இருக்கிறார். நெடுஞ்சாலைகளில் அதிக தூரம் இரு சக்கர வாகனம் இயக்கியும், ஸ்டண்ட் செய்தும் யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் பிரபலமாக உருவாகி இருக்கிறார். லட்சக்கணக்காக கொட்டும் யூ டியூப் வருமானம் வாசனை சிந்திக்க விடாமல் செய்து விட்டதோ என்னவோ, மனிதரின் பேச்சு சமீபகாலமாக அவருக்கே வம்பை வாங்கி கொடுத்து வருகிறது.
இவரது சேனலை பார்த்து ஏராளமான இளைஞர்கள் புது வண்டிகளை வாங்கி தாங்களும் சாகசம் செய்வதாக விபத்துகளில் சிக்குகிறார்கள். இதனால் காவல் துறையும் நடவடிக்கையில் இறங்கியது.
காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்து ஏற்படுத்தப்பட்ட வழக்கில் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வந்த அவர் தினமும் காவல் நிலையத்தில், வாசன் கையெழுத்து போட்டு வருகிறார்.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் டிடிஎப் வாசன் வழக்கில், அவரது யூ டியூப் சேனலை ஏன் முடக்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.
இதனால் காவல்துறையினரும் வாசனின் யூ டியூப் சேனலை பார்த்து பல இளைஞர்கள், கெட்டுப் போவதாகவும் அவரது யூ ட்யூப் சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவிட கோரிக்கை வைத்திருந்தனர்.
காவல்துறையினர் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தற்பொழுது அவரது சேனலை முடக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசை அடுத்து வாசனின் யூ ட்யூப் சேனல் எந்த நேரமும் முடக்கப்படலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
டிடிஎப் வாசனின் ஏற்கனவே இருக்கிற ‘ட்வின் த்ராட்லர்ஸ்’ யூ டியூப் சேனல் 4.2 மில்லியன் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை கொண்டுள்ளது. இதனால் வருமானமும் மாதம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் அவருக்கு வருகிறது. இந்த சேனல் முடக்கப்பட்டால் ஒட்டுமொத்த வருமானமும் போய்விடும்.
வாசனை போல வாகனம் ஓட்டுபவர்கள் பலர் இருந்தாலும், வாசனின் பேச்சுத்திறமையும் சேர்வதால் தான் அவரது சேனலை பார்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது உண்மை.
இப்படி பெரும் வருமான ஆதாரமாக வளர்த்து விட்ட சேனலை விடுவாரா வாசன்.. உடனடியாக இன்னொரு சேனலை ஆரம்பித்து விட்டார். அந்த சேனலுக்கு வருமாறு தனது ரசிக கண்மணிகளுக்கென பழைய சேனலில் ஒரு வீடியோவையும் போட்டு இருக்கிறார்.
இம்மார்ட்டல் டிடிஎப் வாசன் என்று புது சேனலுக்கு பெயரிட்டு இருக்கிறார். இம்மார்ட்டல் என்றால் அழிவில்லாதவன் என்று பொருள்.
இத்தணை பிரச்சினைகள் ஆன பிறகும் அழிவில்லாதவன் என்று சேனல் ஆரம்பித்து இருக்கிறார் என்றால் பாருங்கள், வாசனுக்கு என்ன ஒரு தில்லு என்று அவரது ரசிக குஞ்சுகள் கெத்து காட்டி வருகிறார்கள். அந்த சேனலுக்கும் 1.73 லட்சம் பேர் உடனடியாக சப்ஸ்கிரைபர் ஆகி உள்ளார்கள்.
என்னதான் இருந்தாலும் பழைய சேனல் அளவுக்கு அவருக்கு ஆதரவு இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
வாயால பேசியே வளர்ந்து... வாயால பேசியே சேனல பறிகொடுக்குற அளவுக்கு போயிருக்கிறார் வாசன். இந்த புதிய சேனலிலாவது நல்ல விஷயங்களை பதிவிட வேண்டும். அதை விடுத்து இதிலும் இளைஞர்களை சீரழிக்கும் சாகச வீடியோக்களையும், நான் தான் கெத்து என்ற ரேஞ்சில் வாய்க்கொழுப்பு வீடியோக்களையும் வெளியிட்டால், புதிய சேனலுக்கும் சட்டம் தன் கடமையை செய்ய நாளாகாது என்பதை உணர வேண்டும் இந்த ‘இம்மார்ட்டல்.