மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.!


 மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு - அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.!


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.


அப்போது அங்கு திரண்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உள்ளிட்டவற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர். பாஜக கொடிக் கம்பம் நடும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 


அமர் பிரசாத் ரெட்டி மீது 3 வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், கொடிக் கம்பம் சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் " சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் தலா 2,000 ரூபாய் வழங்க வேண்டும், மேலும், 2 வாரங்களுக்கு காலை, மாலை என 2 நேரங்களும் கானாத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.


மேலும் 55 அடி உயரக் கம்பத்தில் கொடி கண்ணுக்கு தெரியாது. காக்கா, குருவி உட்கார மட்டுமே அந்தக் கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு மீண்டும் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதித்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Previous Post Next Post